புவனேஸ்வர்:”” புதிய பொருளாதாரக் கொள்கையால், நாட்டில் வறுமை அதிகரித்துள்ளதாக சிலர் கூறுகின்றனர். அதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை” என்று, பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
ஒரிசா மாநிலத் தலைநகர் புவனேஸ்வரில், நேற்று நடந்த 92வது இந்தியப் பொருளாதாரக் கூட்டமைப்பின் மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மன்மோகன் சிங் கூறியதாவது:புதிய பொருளாதாரக் கொள்கை தான், நாட்டில் வறுமையை அதிகரித்து விட்டது; வளர்ச்சியைத் தடை செய்து விட்டது என்ற சிலரின் கூற்று தவறானது.
நம் நாட்டின் மிகப் பெரிய சவாலாக வறுமை இன்னமும் இருக்கின் றது. வறுமையில் வாடுபவர்கள் தங்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்திக் கொள்வதற்கு நாம் இன்னும் கவனம் செலுத்த வேண்டும். வளர்ந்து வரும் தொழிலாளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கினால் தான் பொருளாதாரம் வளர்ச்சி அடையும்.பதினோராவது ஐந்தாண்டுத் திட்டத்தில், வளர்ச்சியை முழுமையாக நாம் அடைய வேண்டும்.பொருளாதார நிபுணர்கள் சிலர், புதிய பொருளாதாரக் கொள்கை, பணக்காரர்களை மேலும் பணக்காரர்களாகவும், ஏழைகளை மேலும் ஏழைகளாகவும் ஆக்குகிறது என்று கூறுகின்றனர்.வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்பவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தியுள்ளது என்றும், நகரம் மற்றும் கிராமங்களுக்கு இடையிலான இடைவெளி அதிகரித்து வருகிறது என்றும் கூறி வருகின்றனர்.அவர்கள் கூறுவது போல, வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகமாகவில்லை.
மாறாக பொருளாதார சீரமைப்புகள் மேற்கொண்ட பிறகு, முன்னெப் போதும் இல்லாத அள விற்கு குறைந்து கொண்டுதான் வருகிறது.அப்படி வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்கள் அதிகரித்திருந்தால், அது மக்கள் தொகையிலும் வெளிப்படையாகத் தெரிந்திருக்கும்.இப்போது வறுமை பற்றி நமது ஆய்வு எல்லாம் 2004-05ல் எடுக்கப் பட்ட தேசிய மாதிரி ஆய்வை அடிப்படையாகக் கொண்டதுதான். 2009-10 க்கான ஆய்வு இன்னும் ஓர் ஆண்டுக்குள் தயாராகும்.இவ்வாறு பிரதமர் தெரிவித்தார்.
Leave a Reply