புதுடில்லி: ‘மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும், 3ஜி மொபைல் சர்வீசுக்கான ஸ்பெக்ட்ரம் ஏலம், அடுத்த ஆண்டு பிப்ரவரி மாத இறுதியில் அல்லது மார்ச் முதல் வாரத்தில் துவங்கும்’ என, மத்திய அரசு உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
கடந்த வாரம் நிருபர்களிடம் பேசிய மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ராஜா, ”ஸ்பெக்ட்ரம் ஏலம் நிர்ணயித்தபடி, 2010 ஜனவரி 14ம் தேதி நடைபெற வேண்டும். ஆனால், அதற்கான விண்ணப்பங்களை வரவேற்கும் நோட்டீசை, தொலை தொடர்புத் துறை இன்னும் இறுதி செய்யாததால், நிர்ணயித்தபடி ஏலம் நடைபெறுவது கடினம்,” என்றார்.
இந்நிலையில், மத்திய அரசு உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: பெரும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் 3ஜி மொபைல் சர்வீசுக்கான ஸ்பெக்ட்ரம் ஏலம், அடுத்த ஆண்டு பிப்ரவரி மாத இறுதியில் அல்லது மார்ச் முதல் வாரத்தில் நடைபெறும். அதாவது ஏல நடவடிக்கைகளை துவங்க குறைந்தபட்சம் ஐந்து வாரங்களாகும். வருட இறுதி மற்றும் கிறிஸ்துமஸ் விடுமுறைகள் உள்ளதால், விண்ணப்பங்களை வரவேற்கும் நோட்டீஸ், அனேகமாக அடுத்த ஆண்டு ஜனவரி மத்தியில் வெளியிடப்படும். 3ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் மூலம், 25 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட அரசு திட்டமிட்டுள்ளது. இவ்வாறு மத்திய அரசு உயரதிகாரி கூறினார்.
Leave a Reply