ஐதராபாத் : தெலுங்கானா மாநிலம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கட்சி வேறுபாடு இன்றி, 93 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்துள்ளனர். இதனால் ஆந்திராவில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
ஆந்திராவை பிரித்து, தெலுங்கானா மாநிலம் அமைக்கக் கோரி தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி தலைவர் சந்திரசேகர ராவ் கடந்த 30ம் தேதி உண்ணாவிரதத்தை தொடங்கினார். இதைத்தொடர்ந்து தெலுங்கானா பகுதியில் கலவரம் ஏற்பட்டது. ராவின் உடல் நிலை மோசமடைந்தது. இதையடுத்தது, டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, பிரதமர் மன்மோகன் சிங், உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா , ராணுவ அமைச்சர் அந்தோணி, அரசியல் ஆலோசகர் அகமது பட்டேல் ஆகியோர் பங்கேற்ற உயர்நிலை குழு கூடி, தெலுங்கானா மாநிலம் அமைக்க முடிவு செய்தது.
‘தெலுங்கானா மாநிலம் அமைக்க மத்தியஅரசு ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்து ஆந்திர சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற முதல்வர் ரோசய்யாவுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது’ என்று மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் நேற்றுமுன்தினம் நள்ளிரவு தெரிவித்தார்.
இதையடுத்து, உண்ணாவிரதத்தை ராவ் முடித்தார். தெலுங்கானா பகுதி மக்கள், மாணவர்கள, டி.ஆர்.எஸ்.கட்சி தொண்டர்கள் நேற்று அதிகாலை முதலே பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் மகிழ்ச்சியை கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில் தெலுங்கானா மாநிலம் பற்றி ஆந்திராவை சேர்ந்த எம்.பி.க்களின் கருத்தை கேட்காமல் முடிவு எடுத்ததற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, விஜயவாடா காங்கிரஸ் எம்.பி. லகடாபாடி ராஜகோபால் நேற்று ராஜினாமா செய்தார்.
அவரைத் தொடர்ந்து ராயலசீமா, கடலோர ஆந்திரா, வடக்கு ஆந்திராவைச் சேர்ந்த காங்கிரஸ், தெலுங்குதேசம், பிரஜா ராஜ்யம் கட்சி எம்.எல்.ஏ.க்களும் ராஜினாமா செய்தனர்.
ராஜினாமா செய்துள்ளவர்களில் 53 பேர் காங்கிரஸ். தெலுங்கு தேசம் 29, பிரஜா ராஜ்யம்11. மொத்தம் 93 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்துள்ளனர், இதனால், ஆந்திர அரசியலில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
ராஜினாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் கூறுகையில், ‘தெலுங்கானா மாநிலம் அமைக்க மத்திய அரசு இரவோடு இரவாக ஒப்புதல் அளித்தது தவறு. ஆந்திரா, தெலுங்கானா, ராயலசீமா, வடக்கு ஆந்திரா என் 4 மாநிலமாக ஆந்திராவை பிரிக்க வேண்டும். இல்லையேல், ஆந்திரா ஒரே மாநிலமாக இருக்கவேண்டும். இதை வலியுறுத்தி, கட்சிபாகுபாடு இன்றி ராஜினாமா செய்கிறோம்’ என்றனர்.
இதனிடையே தெலுங்கானா தவிர மற்ற பகுதிகளில் தெலுங்கானா மாநிலம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, போராட்டம் தொடங்கியுள்ளது. தெலுங்கானா பகுதியில் கொண்டாட்டமும். மற்ற பகுதிகளில் எதிர்ப்பும் வலுப்பெற்றுள்ளது.
Leave a Reply