மதுரை : “”அனைத்து சமூக குற்றங்களுக்கும் காரணம் சினிமா,” என, மதுரை ஐகோர்ட் கிளையில் நடந்த வழக்கு விசாரணையின் போது, நீதிபதி வி.தனபாலன் வேதனை தெரிவித்தார்.
முசிறியை சேர்ந்தவர் ராஜ் (பெயர் மாற்றப் பட்டுள்ளது). இவர் அங்குள்ள அரசு மேல்நிலைபள்ளியில் பிளஸ் 2 படிக்கிறார். தீபாவளியன்று பள்ளி வளாகத்தில் நண்பருடன் மது அருந்தியதாக, ராஜை வகுப்பில் அனுமதிக்க தலைமையாசிரியர் மறுத்து விட்டார். இதை எதிர்த்து ராஜின் தந்தை ஐகோர்ட் கிளையில் ரிட் மனு செய்தார். மனுவில், “”மாணவனை பள்ளியில் அனுமதித்து செய்முறை தேர்வில் பங்கேற்க உத்தரவிட வேண்டும்,” என கோரினார். இம்மனு நேற்று, நீதிபதி வி.தனபாலன் முன் விசாரணைக்கு வந்தது. மாணவன், அவரது தந்தை ஆஜராயினர். தலைமையாசிரியர் கிருஷ்ணமூர்த்தி,””மாணவர் செய்த தவறை இன்னும் உணர்ந்ததாக இல்லை. அவருடைய எதிர்கால வாழ்வு பாதிக்கப்பட கூடாது என்ற நோக்கத்தில் இன்னும் அவரை பள்ளியை விட்டு நீக்கவில்லை,” என்றார்.
அனைத்து வாதங்களையும் கேட்ட நீதிபதி வி.தனபாலன் கூறியதாவது: மாணவன் பிளஸ் 1 வரை நல்ல முறையில் படித்துள்ளார். வருகை பதிவேடு நன்றாக உள்ளது. தற்போது இத்தகைய குற்றங்களுக்கு காரணம் அவருடைய வயது. இதற்கு முழு காரணம் சினிமா தான். சில நல்ல சினிமாக்களும் வருகின்றன. சில சினிமாக்களில், கதாநாயகர்கள் செயல்படுவது போல இளைஞர்கள் இத்தகைய செயல்களில் ஈடுபடுகின்றனர். சினிமா ஒழிந்தால் இத்தகைய பிரச்னைகள் ஒழிந்து விடும். சமூகத்தில் நடக்கும் அனைத்து குற்றங்களுக்கும் காரணம் சினிமா. இது என் தனிப்பட்ட கருத்து. பழைய சினிமா பாடல்களை குழந்தைகள் அமைதியாக கேட்டு ரசிக்கின்றனர். இன்றைய சில சினிமா பாடல்களை கேட்டு அலறி அடித்து ஓடுகின்றனர். இதை என் வீட்டிலேயே பார்க்கிறேன். கடந்த இருபது ஆண்டுகளாக சினிமாவில் இந்த நிலை நிலவுகிறது.
சில மாதங்களுக்கு முன், தலைமை நீதிபதி, “தாரே ஜமீன்’ என்ற இந்தி சினிமாவை பார்க்கும்படி கேட்டு கொண்டார். அனைத்து நீதிபதிகளும் அந்த சினிமா பார்த்தோம். அத்தகைய நல்ல சினிமாக்களும் வருகின்றன. குழந்தைகளை நல்லவர்களாக உருவாக்கினால் நாட்டை உருவாக்க முடியும். இதற்கு யாரையும் குற்றம் சாட்ட முடியாது. மொபைல் போன் நல்ல தொழில்நுட்ப கண்டுபிடிப்பு. அதை ஆபாசத்திற்கு பயன்படுத்துகின்றனர். இதை சட்டத்தை அமல்படுத்துவோரும், பெற்றோர்களும் அனுமதிக்க மாட்டார்கள். இருப்பினும் சுற்றுப்புற சூழல் காரணங்கள் இதற்கு காரணமாக அமைந்து விடுகிறது. மாணவருக்கு தண்டனை வழங்குவது நோக்கம் கிடையாது. தண்டனை வழங்கினால் அவரது எதிர்காலம் பாதிக்கப்படும். பிற்காலத்தில் அவர் முக்கியமானவராக வரலாம். பதினேழு வயதில் பருவ கோளாறுகள் ஏற்படும். மாணவரது முந்தைய நடத்தைகள் நன்றாக உள்ளது. எனவே பள்ளி கல்வி துறை மற்றும் மாவட்ட கல்விஅதிகாரிகளுடன் அரசு வக்கீல் ஆலோசித்து, முடிவை கோர்ட்டில் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி குறிப்பிட்டார். விசாரணையை ஜன., 27க்கு தள்ளிவைத்தார்.
Leave a Reply