நியூயார்க் : அமெரிக்காவில் உள்ள 3ல் ஒரு ஐடி நிறுவனம் இந்த ஆண்டில் புதிதாக அதிகம் பேரை வேலைக்கு சேர்க்க திட்டமிட்டுள்ளன.
அமெரிக்க ஐடி நிறுவனங்களில் இந்த ஆண்டு வேலைவாய்ப்புகள் பற்றி பிரபல வேலைவாய்ப்பு இணைய தள நிறுவனம் ஒன்று விரிவான ஆய்வு நடத்தியது. ஐடி நிறுவன உயரதிகாரிகளை சந்தித்து ஊழியர் தேவை பற்றி அலசியது. அதன் அடிப்படையில், மூன்றில் ஒரு ஐடி நிறுவனங்கள் (32 சதவீதம்) இந்த ஆண்டில் அதிகளவில் புதிதாக ஆள்சேர்க்கப் போவதாக தெரிவித்தன. எனினும், 12 சதவீத ஐடி நிறுவனங்கள், ஆட்குறைப்பில் ஈடுபடப் போவதாக கூறின.
இதுபற்றி இணைய தள தலைமை தொழில்நுட்ப அதிகாரி எரிக் பிரஸ்லே கூறுகையில், ÔÔ2010ல் ஐடி துறையில் வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என்று ஆய்வில் தெரிகிறது.
புதிய தொழில்நுட்பங்கள் வர்த்தக விரிவாக்கத்துக்கு உதவும் என நிறுவனங்கள் நினைக்கின்றன. அதற்கேற்ப அதிக ஊழியர்களை வேலைக்கு அமர்த்தவும் தயாராகி வருகின்றனÕÕ என்றார்.
ஐடி துறையில் திறமையான ஊழியர்களை தேர்வு செய்வதில் பல சமரசங்களை நிறுவனங்கள் ஏற்கத் தயாராக உள்ளன. ஊழியர்கள் விரும்பும் பணி நேரம், சலுகைகள் அளிக்கப்படுகின்றன. குறிப்பிட்ட காலத்துக்குள் திறமையை வெளிப்படுத்த தவறும் ஊழியர்களை நீக்கி விட்டு புதிதாக தேர்வு செய்கின்றன என்றும் எரிக் பிரஸ்லே தெரிவித்தார்.
திறமையற்ற ஊழியர்களை பணிநீக்கம் செய்ய ஆதரவு அளிப்பதாக ஆய்வில் 42 சதவீத ஐடி நிறுவன உயரதிகாரிகள் தெரிவித்தனர். ஊழியர்களின் வசதிக்கேற்ப சீக்கிரம் வந்து சீக்கிரம் வீடு திரும்பவோ அல்லது தாமதமாக வந்து தாமதமாக வீடு திரும்பவோ ஏற்பாடு செய்ய 50 சதவீத நிறுவனங்கள் தயாராக உள்ளதும் ஆய்வில் தெரிய வந்தது.
Leave a Reply