சென்னை : அரசு மேல்நிலைப் பள்ளிகளில் கணினி ஆசிரியர்களை நியமிக்க தேர்வு நடத்தக் கோரி, தமிழ்நாடு கணினி அறிவியல் பி.எட்., ஆசிரியர்கள் நலச் சங்கம் தாக்கல் செய்த மனுவை, சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. இந்த சங்கத்தின் பொதுச் செயலர் முத்துராமன் என்பவர் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
எங்கள் சங்க உறுப்பினர்கள் கணினி அறிவியலில் பட்டம் பெற்று, பி.எட்., பட்டமும் பெற்றுள்ளனர். அரசு மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள கணினி ஆசிரியர்கள் பணியிடங்களில், சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து தகுதியுள்ள எங்களுக்கும் தேர்வு நடத்தி நியமிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இம்மனுவை நீதிபதி சந்துரு விசாரித்தார். அரசு சார்பில் சிறப்பு அரசு பிளீடர் சங்கரன், அரசு வக்கீல் தாட்சாயிணி ரெட்டி ஆஜராகினர்.
நீதிபதி சந்துரு பிறப்பித்த உத்தரவு: கணினி ஆசிரியர்கள் நியமனம் தொடர்பாக, கடந்த ஆண்டு ஜூலை மாதம் சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்தது. அதில் உள்ள தவறுகளை சரிசெய்து, கடந்த நவம்பர் 19ம் தேதி ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அந்த உத்தரவின்படி, ஏற்கனவே சிறப்பு தேர்வு எழுதியவர்களில் 35 முதல் 49 மதிப்பெண்கள் வரை பெற்றவர்களுக்கு, மீண்டும் ஒரு முறை தேர்வு எழுத வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
அதற்காக தமிழக அரசு சிறப்பு தேர்வை நடத்துகிறது. இந்த தேர்வில் கலந்து கொள்ள மற்றவர்களையும் சுப்ரீம் கோர்ட் அனுமதித்துள்ளது என்கிற மனுதாரரின் வாதத்தை ஏற்க முடியவில்லை. ஏற்கனவே தேர்வு எழுதி தோல்வியடைந்தவர்களுக்கு இரண்டாவதாக ஒரு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. எனவே, குறிப்பிட்டவர்களுக்காக மட்டுமே இந்த தேர்வு நடத்தப்படுகிறது.
பள்ளிகளில் ஆறு ஆண்டுகளாக கணினி ஆசிரியர்களாக ஒப்பந்த முறையில் பணியாற்றியவர்களை, சிறப்பு தேர்வு நடத்தி பணியில் நியமிப்பது என, அரசு கொள்கை முடிவெடுத்துள்ளது. மனுதாரர் சங்கத்தைப் பொறுத்தவரை, இனிமேல் தான் பணிக்கு செல்ல வேண்டும். எனவே, சிறப்பு தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டவர்களுடன், மனுதாரர்கள் தங்களை ஒப்பிட்டுக் கொள்ள முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதி சந்துரு உத்தரவிட்டுள்ளார்.
Leave a Reply