புதுடில்லி: கிராமப்புறங்களில் 3 ஆண்டுகள் பணியாற்றிய டாக்டர்களுக்கு, முதுகலை மருத்துவ படிப்பு படிக்க முன்னுரிமை வழங்கும்படி, மருத்துவ கவுன்சில் பரிந்துரைத்துள்ளது.
இது குறித்து இந்திய மருத்துவ கவுன்சிலின் தலைவர் கேதன் தேசாய் கூறியதாவது: கிராமப்புறங்களில் மருத்துவசேவையை விரிவுபடுத்த, மத்திய அரசு ஏராளமான பணத்தை செலவிட்டு வருகிறது. ஆனால், இதற்கு ஏற்ப போதுமான மருத்துவர்கள் இல்லை. இதன் காரணமாக, பெரும்பாலான ஆரம்ப சுகாதார மையங்களும், சமூக நலக் கூடங்களும் மூடப்பட்டு கிடக்கின்றன. கிராமப்புறங்களில் பணியாற்ற, நகர்ப் புற டாக்டர்கள் பலர் முன்வராத காரணத்தால், முதுகலை படிக்க விரும்பும் டாக்டர்கள், கிராமப் புறங்களில் குறைந்த பட்சம் மூன்று ஆண்டுகள் பணியாற்றி இருந்தால், அவர்களுக்கு 25 சதவீதம் ஒதுக்கீடு செய்யும் படி, மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளோம்.
கிராமப்புறங்களில் பணியாற்றுவதற்குரிய பட்டப் படிப்புகளையும் உருவாக்க உள்ளோம். கிராமப்புற மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை குறித்த பட்டப் படிப்பை உருவாக்க உள்ளோம். கிராமப் புறங்களிலேயே பிறந்து வளர்ந்து, பிளஸ் 2 வரை படித்த மாணவ, மாணவியருக்கு இந்த பட்டப் படிப்பில் சேர, முக்கியத்துவம் அளிக்கப்படும்.
இது குறித்து விவாதிப்பதற்காக, வரும் பிப்ரவரி மாதம் 4 மற்றும் 5ம் தேதிகளில், 300 மருத்துவக் கல்லூரி முதல்வர்கள், மருத்துவக் கல்வி இயக்குனர்கள், மருத்துவத் துறை அதிகாரிகளின் கூட்டம் நடைபெற உள்ளது. இவ்வாறு கேதன் தேசாய் கூறினார்.
Leave a Reply