உயிரச்சம் காரணமாக நாட்டை விட்டு வெளியேறப் போகிறேன்: சரத் ஃபொன்சேகா

posted in: உலகம் | 0

sarathfonsekasadதனக்கு உயிரச்சம் இருப்பதாகவும், இதனால் நாட்டை விட்டு வெளியேறப் போவதாகவும் கொழும்பு விடுதியில் இருந்து வீடு திரும்பிய எதிர்க்கட்சி வேட்பாளர் சரத் பொன்சேகா பிபிசி சிங்கள சேவைக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்தார்.


“இலங்கையில் சட்டம் ஒழுங்கு கிடையாது. நான் விமான நிலையத்துக்கு செல்வதும் தடுக்கப்பட்டுள்ளது. நாட்டை விட்டு செல்ல எனக்கு அனுமதி அளிக்கப்படக் கூடாது என்று அவர்கள் விமான நிலைய அதிகாரிகளுக்கு கூறியுள்ளனர். இது பற்றி ஏதும் சொல்ல முடியாது.” என பிபிசியின் சந்தன கீர்த்தி பண்டாராவுக்கு பிரத்யேக செவ்வியளித்த சரத் ஃபொன்சேகா கூறினார்.

நான் மக்களை மறக்க மாட்டேன். ஆனால் நான் உயிர் வாழ சில பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது. எந்த நாட்டுக்குப் போகப் போகிறேன் என்பது பற்றி நான் கூற முடியாது. மக்களுடன் தொடர்பில் இருப்பேன் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

தேர்தலில் பெருமளவு முறைகேடுகள் நடைபெற்றதாகவும் அவர் பிபிசிடம் தெரிவித்தார்.

விடுதியில் முற்றுகை

முன்னதாக கொழும்பு நகரில் ஃபொன்சேகா மற்றும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் தங்கியிருந்த விடுதியைச் சுற்றிலும், ஆயுதம் தாங்கிய ராணுவத்தினர் சுமார் 100 பேர் நிறுத்தப்பட்டிருந்தனர்.

ஆனால், இதுபற்றி ராணுவப் பேச்சாளர் உதய நாணயகார கூறும்போது, ஃபொன்சேகாவைக் கைதுசெய்யும் எண்ணம் இல்லை என்று தெரிவித்திருந்தார்.

இராணுவப் பணியை பாதியில் விட்டுச் சென்றவர்கள் உள்பட சுமார் 400 பேருடன் சரத் ஃபொன்சேகா அந்த விடுதியில் தங்கியிருப்பதாகத் தகவல் கிடைத்திருப்பதாகவும், அவர்கள் சரணடைய வேண்டும் என்று தகவல் அனுப்பப்பட்டுள்ளதாகவும் உதய நாணயகார தெரிவித்தார்.

இருந்தபோதும் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர்கள், ஃபொன்சேகா கைதுசெய்யப்படலாம் என்று அச்சம் வெளியிட்டிருந்தனர்.

விடுதிக்கு வெளியே இராணுவத்தினர் நிறுத்தப்பட்டிருந்ததால், அங்கு பதற்றம் நிலவியது.

விடுதிக்கு வெளியிலிருக்கும் இராணுவத்தினர் திரும்பப் பெற வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர்கள் அரசுக்குக் கோரிக்கை விடுத்திருந்தனர்.

ஆனால் இப்படியான பதற்றம் மற்றும் இழுபறிக்குப் பின்னர் சரத் ஃபொன்சேகா விடுதியிலிருந்து வெளியேறி வீடு திரும்பியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *