சென்னை : அரசு சட்டக் கல்லூரியில் பணியாற்றி 62 வயதை கடந்த இரண்டு விரிவுரையாளர்கள், பணியில் தொடர அனுமதிக்க வேண்டும் என அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சட்டக் கல்லூரியில் மாணவர்களுக்கு இடையே பயங்கர மோதல் நடந்தது. 2008ம் ஆண்டு நவம்பர் மாதம் இச்சம்பவம் நடந்தது. இந்த சம்பவங்களை தடுக்க வேண்டும், கல்லூரி சுமுகமாக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி ஐகோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. சட்டக் கல்லூரி, விடுதி செயல்பாடு குறித்து அறிக்கை தாக்கல் செய்ய அட்வகேட் ஜெனரலுக்கு, ஐகோர்ட் உத்தரவிட்டது.
இதையடுத்து, விரிவான விசாரணை நடத்தி அறிக்கையை அட்வகேட் ஜெனரல் தாக்கல் செய்தார். சட்டக் கல்லூரிகளில் போதிய விரிவுரையாளர்கள் இல்லை என்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டது. மேலும், பல பரிந்துரைகள் செய்யப்பட்டன.
இந்த வழக்கை விசாரித்த அப்போதைய தலைமை நீதிபதி கங்குலி, நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா அடங்கிய “முதல் பெஞ்ச்’ அரசுக்கு பல்வேறு பரிந்துரைகளை செய்தது. அதில், காலியிடங்களை நிரப்பும் வரை, ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு விருப்பம் இருந்தால் அவர்களை சட்டக் கல்லூரிகளில் தற்காலிகமாக விரிவுரையாளர்களாக நியமிக்கலாம் என ஐகோர்ட் கூறியிருந்தது.
இந்நிலையில், அரசு சட்டக் கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றிய டாக்டர் வீரப்பன், பேராசிரியர் சூர்யபிரகாசம் ஆகியோருக்கு வழங்கப்பட்ட உத்தரவில், “காலியிடங்களை நிரப்பும் வரையோ அல்லது 62 வயது பூர்த்தியடைந்தாலோ பணியில் இருந்து விடுவிக்கப்படுவர்’ என கூறப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் டாக்டர் வீரப்பன், பேராசிரியர் சூர்யபிரகாசம் மனுக்கள் தாக்கல் செய்தனர். ஐகோர்ட் உத்தரவுப்படி, விரிவுரையாளர்களாக தொடர்ந்து பணியாற்றுவதற்கு அரசு பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டது.
இதை தலைமை நீதிபதி கோகலே, நீதிபதி சசிதரன் அடங்கிய “முதல் பெஞ்ச்’ விசாரித்தது. டாக்டர் வீரப்பன் சார்பில் வக்கீல் ஆர்.சுரேஷ்குமார், சூர்யபிரகாசம் சார்பில் சீனியர் வக்கீல் ஏ.தியாகராஜன், வக்கீல் எஸ்.ரமேஷ்குமார் ஆஜராகினர்.
“முதல் பெஞ்ச்’ பிறப்பித்த உத்தரவு: பணியில் தொடர்ந்து இருக்க மனுதாரர்கள் உரிமை கோர முடியாது என எங்களுக்கு தெரியும். இருந்தாலும், சட்டக் கல்லூரிகளில் எதிர்கொள்ளும் பிரச்னைகளை பரிசீலித்து அதை கவனத்தில் கொள்ளும் வகையில், “டிவிஷன் பெஞ்ச்’ உத்தரவு பிறப்பித்துள்ளது. சட்டக் கல்வியின் தரத்தை மேம்படுத்துவதற்காக செய்யப்பட்ட பரிந்துரைகளை, அரசு சாதகமாக எடுத்துக் கொண்டிருக்க வேண்டும்.
அவ்வாறு எடுப்பதற்குப் பதில், அதிகாரவர்க்க ரீதியில் அரசு செயல்பட்டுள்ளது. எதிர்பார்த்தபடி அரசு செயல்படவில்லை. சட்டக் கல்வி இயக்குனர், சட்டக் கல்லூரி முதல்வர், கோர்ட்டில் இருந்துள்ளனர். மனுதாரர்களின் கோரிக்கையை பரிசீலிக்குமாறு கோர்ட் முன்வைத்த பரிந்துரைக்கு, அரசு வக்கீலால் சரியான பதிலை தெரிவிக்க முடியவில்லை.
எனவே, பிப்., 1ம் தேதி முதல் மனுதாரர்கள் இருவரையும் பணியில் தொடர அரசு அனுமதிக்க வேண்டும். மற்ற பணியிடங்களைப் பொறுத்தவரை, விவரங்களை அரசு தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை 4ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது. இவ்வாறு “முதல் பெஞ்ச்’ உத்தரவிட்டுள்ளது.
Leave a Reply