பெங்களூரு : நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் மீது மத்திய அரசு எடுத்த நடவடிக்கையைத் தொடர்ந்து, அங்கீகாரம் பெறாத 35 கல்லூரிகளை இழுத்து மூட கர்நாடக மாநில அரசு, உத்தரவிட்டுள்ளது.
முறையான கட்டமைப்பு, கல்வி வசதிகளை அமைக்காத நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் அங்கீகாரத்தை சமீபத்தில் மத்திய அரசு ரத்து செய்தது. இதையடுத்து, கர்நாடக மாநிலத்தில் அரசு அங்கீகாரம் இல்லாமல் இயங்கி வரும் கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.அதன்படி, அங்கீகாரம் பெறாமல் இயங்கி வரும் 35 கல்லூரிகளின் பட்டியலை கடந்த வாரம் அம்மாநில அரசு வெளியிட்டது. இவற்றில் ஆறு கல்லூரிகள் வெளிநாட்டுக் கல்லூரிகளுடன் இணைந்து செயல்படுபவை. பெரும்பாலான கல்லூரிகள் மேலாண்மை தொடர்பான படிப்புகளை மட்டுமே வழங்கி வருகின்றன.
மாநில உயர்கல்வித் துறை அமைச்சர் அரவிந்த லிம்பாவலி இது பற்றிக் கூறியதாவது: இந்தக் கல்லூரிகள் முறையாக அங்கீகாரம் பெறவில்லை. சம்பந்தப்பட்ட துறை, இந்தக் கல்லூரிகளுக்கு இரண்டு முறை கடிதம் அனுப்பியும் எவ்வித பதிலும் அவை அனுப்பவில்லை. அவற்றை இழுத்து மூடுவதைத் தவிர வேறு வழியில்லை. இந்த நடவடிக்கையில் தேவைப் பட்டால் போலீசின் உதவியும் பெறப்படும்.முறையான கட்டமைப்பு பெற்றுள்ள, தரமான கல்வி வழங்கக் கூடிய கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்கப்படுவது குறித்து ஆலோசிக்கப்படும்.இந்தக் கல்லூரிகளில் சேர்வதற்கு முன்பு, இவை அங்கீகாரம் பெற்றவைதானா என்று மாணவர்கள் விசாரித்திருக்க வேண்டும். அவர்கள் நல்ல வேலை வாய்ப்பு பெற வேண்டுமானால் படிப்பு விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.இவ்வாறு அமைச்சர் அரவிந்த் தெரிவித்தார்.
Leave a Reply