தர்மபுரி: குடியரசு தினத்தன்று நோயாளிகளுக்கு இலவச முகச் சவரம் செய்து தர்மபுரி வாலிபர் சேவை செய்தார். தர்மபுரியை அடுத்த பழைய பேட்டையை சேர்ந்தவர் கணேஷ் (34).
இவர், தர்மபுரி நான்கு ரோடு சந்திப்பு ரவுண்டானா பகுதியில் சலூன் கடை நடத்தி வருகிறார். இந்த வாலிபருக்குள் இருந்த தேசப்பற்றும், தேசிய உணர்வும், குடியரசு தினத்தில் ஏதாவது செய்ய வேண்டும் என மனதுக்குள் அலை பாய்ந்து வந்தது.
கடந்த காலங்களில் நண்பர்களோடு சேர்ந்து குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவிக்கும் பேனர்களை கட்டி அழகு பார்த்தும், குடியரசு தின வாழ்த்துக்களை பகிர்ந்து வந்த கணேசன். 61வது குடியரசு தினத்தில் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என முடிவு செய்தார். இவரது முடிவுக்கு அவரது நண்பர்கள் ஊக்கம் கொடுத்தனர். சிலரோ இவரது சேவை முடிவை பார்த்து கேலியும் செய்தனர். எதையும் பெரிதுபடுத்தாமல் தன் கடமையை கண்ணாய் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு இலவசமாக முகச்சவரம் செய்ய முடிவு செய்தார். முதலில் தர்மபுரி விவேகானந்தா காது கேளாதோர் பள்ளிக்கு சென்று, அங்குள்ள 15 மாணவர்களுக்கு முடி வெட்டி அழகு பார்த்தார். அங்கிருந்து தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு வந்த கணேஷ், டாக்டர்களின் முழு ஒத்துழைப்புடன் நோயாளிகளுக்கு காலை 11.30 மணியில் இருந்து முகச்சவரம் செய்ய துவங்கினார். இரவு 8 மணி வரையில் 100 பேருக்கு முகச்சவரம் செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தில், நேற்று மாலை 4 மணி வரையில் 50 பேருக்கு முகச் சவரங்கள் செய்து முடித்த போதும், தொடர்ந்து இடைவேளையில்லாமல் தனது பணியில் கண்ணும் கருத்துமாக இருந்த கணேஷிடம் கேட்டபோது,””குடியரசு தினத்தில் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். முகத்தில் சந்தோஷம் பொங்க வேண்டும்.
அதனால், நோயாளிகளுக்கு முகச்சவரம் செய்து அவர்களையும் குடியரசு நாளில் குதூகலத்துடன் இருக்கச் செய்தேன். இது ஒரு சமூக சேவைப் பணியாக நினைத்து செய்கிறேன்,” என்றார்.
திருச்சி: திருச்சியில் குடியரசு தினத்தை புறக்கணித்து வீடுகளில் கறுப்புக் கொடி ஏற்ற முயன்ற பெரியார் தி.க., திருச்சி மாவட்டத் தலைவர் கைது செய்யப்பட்டார். இரட்டைக் குவளை முறை, இரட்டை சுடுகாடு இன்னும் ஒழிக்கப்படாமல் இருப்பதை கண்டித்தும், அடிப்படை வசதிகள் இன்னும் முழுமையாக கிடைக்காததை கண்டித்தும் குடியரசு தினத்தன்று வீடுகளில் கறுப்புக் கொடி ஏற்றப் போவதாக, பெரியார் தி.க., அறிவித்து இருந்தது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று முன்தினம் இரவு கோட்டை கள்ளர் தெருவில் உள்ள வீட்டில், பெரியார் தி.க., திருச்சி மாவட்டத் தலைவர் ராஜேந்திரன் கைது செய்யப்பட்டார்.
இதேபோல் திருச்சியில் பல்வேறு இடங்களில் மேற்கண்ட கோரிக்கைகளை துண்டு பிரசுரத்தில் அச்சிட்டு வினியோகம் செய்த பாலக்கரை எடத்தெருவை சேர்ந்த பெரியார் தி.க., மாவட்ட பிரதிநிதி முத்து, நேற்று காலை கைது செய்யப்பட்டார்.
Leave a Reply