திருச்சி: “தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தால், விவசாயப் பணிகள் பாதிக்கப்படுவதாக வந்த புகாரையடுத்து, விவசாயம் நடக்காத காலத்தில், வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தைச் செயல்படுத்த மத்திய அரசிடம் பரிந்துரை செய்யவுள்ளோம்’ என, மத்திய இணை அமைச்சர் நெப்போலியன் கூறினார்.
திருச்சியில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:நாடு முழுவதும் 2001ம் ஆண்டு கணக்கெடுப்பு படி, இரண்டு கோடியே 10 லட்சம் உடல் ஊனமுற்றோர் உள்ளனர்.
இதில், ஒரு கோடியே 60 லட்சம் விழியிழந்தோர் உள்ளனர். மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் பரவலாக்கல் துறை சார்பாக, ஊனமுற்றோர் மற்றும் விழியிழந்தோர் நலன் கருதி, புதிதாக வெப்சைட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.அனைத்து துறையினரும் இதுபோல் வெப்சைட் துவக்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. புதிதாக கட்டப்படும் அனைத்து அரசு அலுவலகங்களிலும், உடல் ஊனமுற்றோர் பயன்படுத்தும் வகையில் சாய்வு தளம் அமைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.ஊனமுற்றோர் சேவையில், நாட்டிலுள்ள 600 மாவட்டங்களில் சிறந்த மாவட்டமாக சேலமும், சிறந்த மாநகராட்சியாக சென்னை மாநகராட்சியும், சிறந்த ஊனமுற்றோர் கமிட்டியாக நெல்லையும், ஊனமுற்றோருக்கு கடன் வழங்கிய வங்கியாக தமிழ்நாடு கூட்டுறவு வங்கியும் தேர்வு செய்யப்பட்டு, நான்கு பரிசுகளை தமிழகமே பெற்றுள்ளது.இவ்வாறு நெப்போலியன் கூறினார்.
Leave a Reply