மிர்புர் : வங்கதேசத்திற்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்றுள்ளது. வங்கதேசம் சென்றுள்ள இந்திய அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது.
சிட்டகாங்கில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா வென்றது. இரண்டாவது போட்டி மிர்புரில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் வங்கதேசம் 233 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய இந்திய அணி, 8 விக்கெட் இழப்பிற்கு 544 ரன்கள் எடுத்து டிக்ளர் செய்தது. இதனையடுத்து தனது 2வது இன்னிங்சை துவக்கிய வங்கதேச அணி, துவக்கத்தில் ரன்களை குவித்தாலும் பின்னர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
நேற்றைய ஆட்டநேர இறுதியில் 3 விக்கெட் இழப்பிற்கு 290 ரன்கள் எடுத்திருந்த வங்கதேச அணி, 4வது நாளான இன்று ஆட்டம் துவங்கியவுடன் 14 ரன்கள் எடுப்பதற்குள் 6 விக்கெட்டுகளை இழந்தது. வங்கதேச அணி உணவு இடைவேளைக்கு முன் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 312 ரன்கள் எடுத்தது. உணவு இடைவேளை முடிந்து வந்த சில நிமிடங்களில் ஜாகீர்கானின் பந்து வீச்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய தரப்பில் ஜாகீர்கான் அபாரமாக பந்துவீசி 7 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். ஓஜா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 2 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மிக எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, இறங்கிய முதல் ஓவரிலேயே 2 ரன்களையும் அடித்து, 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்ற இந்திய அணி, 2010ம் ஆண்டிற்கான ஐடியா கோப்பையையும் கைப்பற்றியது.
சச்சினுக்கு சிறப்பு விருது : வங்தேசத்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 15 விக்கெட்டுகளை வீழ்த்திய ஜாகீர்கானுக்கு ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது. டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் 13 ஆயிரம் ரன்களை கடந்ததற்காக இந்திய அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கருக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது.
Leave a Reply