புதுடில்லி: கல்வியில் மிகவும் பின்தங்கிய 374 மாவட்டங்களில், மாதிரிக் கல்லூரிகளைத் துவக்க, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இத்திட்டத்தால், ஒரு லட்சத்து 87 ஆயிரம் மாணவர்கள் பயன்பெறுவர். நாடு முழுவதும், கல்வியில் பின்தங்கிய பகுதிகள் முன்னேறும் வகையில், மாதிரிக் கல்லூரிகள் துவக்கும் திட்டத்தை, 2007 சுதந்திர தினத்தன்று பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்திருந்தார். இத்திட்டத்தின் படி, பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளின் எண்ணி க்கை அடிப்படையில் தயாரிக்கப்பட்ட, தேசிய சேர்க்கை விகிதத்தை (ஜி.இ.ஆர்.,) விடக் குறைவாக, சேர்க்கை விகிதம் உள்ள மாவட்டங்களில் இந்த மாதிரிக் கல்லூரிகள் துவக்க முடிவு செய்யப்பட்டது.
இந்த வகையில், மொத்தம் 374 மாவட்டங்கள், கல்லூரிகள் துவங்குவதற்கு அடையாளம் கண்டறியப் பட்டிருக்கின்றன. இந்தக் கல்லூரி நிறுவுவதற்கு ஆகும் செலவில் மத்திய அரசு, மூன்றில் ஒரு பங்கினை மட்டும் தரும். இதர பங்கையும் கல்லூரி நடத்தும் செலவையும், கல்லூரிக்கான நிலத்தையும், மாநில அரசே தர வேண்டும்.
சிறப்பு வகை மாநிலங்களில் மட்டும், மத்திய அரசு 50 சதவீத பங்களிப்பு தரும். இவ்வகையில், மொத்தம் இரண்டாயிரத்து 992 கோடி ரூபாய் செலவாகும் என்றும், மத்திய அரசின் பங்காக ஆயிரத்து 79 கோடி ரூபாய் வழங்கப்படும் என்றும் திட்டமிடப்பட்டுள்ளது. ஒரு கல்லூரிக்கு அதிகபட்சமாக 2.67 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்குகிறது. சிறப்பு வகை மாநிலங்களில் மட்டும் இத்தொகை, நான்கு கோடி ரூபாய் அளவு அதிகரிக்கப்படும். மாநிலங்கள் மற்றும் மத்திய அரசுக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந் தங்கள் மேற்கொள்ளப்பட்ட பின் இந்த நிதி வழங்கப்படும்.
பல்கலைக் கழக மானியக் குழு மற்றும் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை மூலம், இந்த நிதி மாநிலங்களுக்கு வழங்கப்படும். இத்திட்டத்தின் மூலம், மொத்தம் ஒரு லட்சத்து 87 ஆயிரம் மாணவர்கள் பயன்பெறுவர் என்றும், கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Leave a Reply