பவாருக்கு ‘ஆப்பு’: விவசாய அமைச்சகத்தைப் பிரிக்க முடிவு

posted in: மற்றவை | 0

டெல்லி: மத்திய விவசாய அமைச்சகத்திடம் தற்போது உள்ள நுகர்வோர் விவகாரத் துறையை அங்கிருந்துப் பறித்து புதிய துறையாக மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதன் மூலம் பெருகி வரும் உணவுப் பொருள் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தத் தவறிய சரத் பவாருக்கு ஆப்பு வைக்கவும் காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாம்.

உணவுப் பொருட்களின் விலைவாசி வரலாறு காணாத வகையில் ஏறிக் கொண்டிருக்கிறது. ஆனால் இதுகுறித்து சரத் பவார் படு அலட்சியமாக பேசி வருகிறார். எல்லா இடத்திலும்தான் விலைவாசி உயர்வு இருக்கிறது என்றும் கூறி வருகிறார்.

இதனால் எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாமல் காங்கிரஸ் கட்சியும் கூட பவார் மீது கடும் அதிருப்தியுடன் உள்ளது.

இந்த நிலையில், விவசாய அமைச்சகத்திடமிருந்து நுகர்வோர் விவகாரத் துறையைப் பிரிக்க மத்திய அரசு தீர்மானித்துள்ளதாக தெரிகிறது. ஏற்கனவே வீரப்ப மொய்லி கமிட்டி இந்தத் துறையை விவசாய அமைச்சகத்திலிருந்து பிரிக்க பரிந்துரைத்துள்ளது.

இது பவாருக்கு வைக்கப்படும் ஆப்பு என கருதப்படுகிறது.
ஆனால் நுகர்வோர் விவகாரத்துறையைப் பிரித்தால், பவார் அமைச்சர் பதவியில் நீடிப்பாரா என்பது சந்தேகம் என்ற பேச்சும் எழுந்துள்ளது. காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் இடையிலான கூட்டணி முறிவு வரை கூட அது போகலாம் என்றும் பேச்சு அடிபடுகிறது.

பிரதமரும்தான் பொறுப்பு – பவார்

இதற்கிடையே, விலைவாசி உயர்வுக்கு நான் மட்டுமே காரணம் கிடையாது. பிரதமர் தலைமையில் அமைச்சரவைதான் முக்கிய முடிவுகளை எடுக்கிறது. எனவே விலைவாசி உயர்வுக்கு என்னை மட்டுமே பொறுப்பு கூற முடியாது என்று பவார் தெரிவித்துள்ளார்.

சர்க்கரை, பருப்பு உள்ளிட்டவற்றின் விலை உயர்வு குறித்து அவர் கூறுகையில், கொள்கை முடிவுகளை நான் மட்டும் எடுப்பதில்லை. பிரதமர் உள்பட அமைச்சரவையின் கூட்டு முடிவே அமல்படுத்தப்படுகிறது.

யாருமே தனியாக முடிவெடுக்க முடியாது. எல்லாவற்றுக்கும் நிபுணர் குழு உள்ளது. அதுதான் வழி காட்டுகிறது. அதன் அறிக்கையின் பேரில்தான் முடிவுகள் எடுக்கப்படுகின்றன. முடிவுகள் எடுப்பதில் அனைவருக்கும் பங்குண்டு.

சர்க்கரை விலை குறித்து பிரதமர் ஆலோசனையின்பேரில் அமைச்சரவைதான் முடிவெடுத்தது என்றார் பவார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *