மும்பை:”பெண்களை எரித்துக் கொலை செய்தவர்கள், நீதித்துறையிடம் இருந்து கருணையை எதிர்பார்க்கக் கூடாது’ என, மும்பை ஐகோர்ட் தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிரா, மும்பையில் அமைந்துள்ள, ட்ராம்பே பகுதியை சேர்ந் தவர் பாலாஜி மனே. இவரது மனைவி கல்பனா, 2006ம் ஆண்டு ஜூன் மாதம், தீ வைத்துக் கொல்லப் பட்டார். இந்த வழக்கில், பாலாஜிக்கு ஆயுள் தண்டனை வழங்கி செஷன்ஸ் கோர்ட், 2008ம் ஆண்டு தீர்ப்பளித்தது.
இதையடுத்து, பாலாஜி, தானே சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி, பாலாஜி மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.இந்த மனு நீதிபதிகள் ரஞ்சனா தேசாய் மற்றும் மிருதுளா பட்கர் ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது. இந்த மனு மீதான விசாரணையின் போது, அரசு தரப்பு கூடுதல் வக்கீல் உஷா கெஜாரிவால் கூறுகையில்,”பாலாஜி தன் முதல் மனைவியை, 2001ம் ஆண்டு, இதேபோன்ற சம்பவத்தில் கொன்றுள்ளார். எனவே, அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது. இந்த வழக்கில் பாலாஜியின் குடும்ப உறுப்பினர்கள் உட்பட அனைவரும் அவருக்கு எதிராக சாட்சி அளித்துள்ளனர்’ என்றார்.
இந்த வாதத்தை கேட்ட நீதிபதி ரஞ்சனா தேசாய் கூறியதாவது:இயற்கைக்கு மாறாக இறக்கும் பெண்களில் பத்து பேரில், ஆறு பேர், இவ்வாறு தீ வைத்துக் கொல்லப்படுகின்றனர். இது போன்ற பல்வேறு வழக்குகளை விசாரித்துள்ளோம். கல்பனா பாலாஜியின் இரண்டாவது மனைவி என்பதையும், இரண்டு மனைவியும் ஒரே மாதிரி இறந்திருப்பதையும், வக்கீல் உஷா கெஜாரிவால் சுட்டிக் காட்டி உள்ளார். இவ்வாறு பெண்களை தீயிட்டு எரித்துக் கொன்றவர்கள், நீதித்துறையிடம் கருணையை எதிர்பார்க்கக் கூடாது. எனவே, பாலாஜியின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.இவ்வாறு ரஞ்சனா தேசாய் கூறினார்.
Leave a Reply