முட்டைக்கு மைனஸ் ரேட் வழங்கும் என்.இ.சி.சி., : அதிர்ச்சியில் புரோக்கர்கள், வியாபாரிகள்

6933667நாமக்கல்: முட்டையின் தேவையைப் பொறுத்து, மைனஸ் ரேட் வழங்க என்.இ.சி.சி., முடிவு செய்வதால், முட்டை வியாபாரிகள், புரோக்கர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில், 800க்கும் மேற்பட்ட கோழிப் பண்ணைகள் உள்ளன. இங்கிருந்து, தினமும், 2.50 கோடி முட்டைகள், நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும், வெளி நாடுகளுக்கும் அனுப்பப்படுகின்றன. இங்கு உற்பத்தி செய்யும் முட்டைகளுக்கு, நாமக்கல்லில் செயல்பட்டு வரும் தேசிய முட்டை விலை நிர்ணயக்குழு (என்.இ.சி.சி.,) விலை நிர்ணயம் செய்கிறது. வாரத்தில் மூன்று நாள் வீதம், விலை நிர்ணயம் செய்யப்படும். எனினும், கோழிப் பண்ணைகளில் முட்டை எடுக்கும் புரோக்கர்கள், நிர்ணயம் செய்யப்பட்ட விலையில் இருந்து, சற்று விலையை குறைத்து முட்டை எடுப்பர். புரோக்கர்களின் ஆதிக்கம் காரணமாக, என்.இ.சி.சி., நிர்ணயம் செய்யும் விலை, கோழிப் பண்ணையாளர்களுக்கு கிடைக்காத சூழல் இருந்தது. இப்பிரச்னைக்கு தீர்வு காணும் விதத்தில், சில நாட்களாக நாள்தோறும் என்.இ.சி.சி., முட்டை விலை நிர்ணயம் செய்து வருகிறது. முட்டையின் தேவையைப் பொறுத்தும் மைனஸ் ரேட் வழங்குவதை, என்.இ.சி.சி., முடிவு செய்கிறது. இது முட்டை வியாபாரிகள், புரோக்கர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முட்டை வியாபாரி ஒருவர் கூறியதாவது: இந்தியாவில் எந்த மாநிலத்திலும் முட்டைக்கு மைனஸ் ரேட் வழங்குவதில்லை. ஆனால், நாமக்கல் மாவட்டத்தில் காலம், காலமாக மைனஸ் ரேட் வழங்கப்பட்டுள்ளது. அதனால், என்.இ.சி.சி., ஒரு விலை நிர்ணயம் செய்தாலும் கூட, புரோக்கர்கள் ஒன்று கூடி, ஒரு விலையை நிர்ணயித்து பண்ணைகளில் முட்டை எடுப்பர். உதாரணத்துக்கு, முட்டை 260 காசுக்கு விற்பனையானால், 40 முதல் 50 பைசா வரை, முட்டையை விலை குறைத்து பண்ணைகளில் புரோக்கர்கள் கொள்முதல் செய்வர். பின், அந்த முட்டையை மூன்று ரூபாய் வரை விற்பனை செய்வர். இதனால், முட்டை விலை உயர்ந்தாலும் பண்ணையாளர்களுக்கு பெரிய அளவில் லாபம் கிடைக்கவில்லை. முட்டை விலையுடன் வாடகை கொடுத்தால், வியாபாரிகள் பயனடைவர். அதே நேரத்தில் முட்டையை வாங்கும் வியாபாரிகள், அதை கேரளா போன்ற வெளி மாநிலங்களுக்கு கொண்டு செல்லும்போது, ஒரு நாள் ஆகிவிடும். தற்போது, நாள்தோறும் முட்டை விலை நிர்ணயம் செய்வதால், முட்டை விற்பனைக்கு கொண்டு செல்லும் சமயத்தில், அதன் விலை குறைந்தால், அது வியாபாரிகளின் கையை கடிக்கும் விதத்தில் அமையும். விலை உயர்ந்தால் வியாபாரிகளுக்கு லாபம் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *