வாசனை திரவியமாகும் திமிங்கலத்தின் எச்சம்: கிலோ ரூ.பல லட்சத்துக்கு விற்பனை

கீழக்கரை : திமிங்கலத்தின் எச்சமாக வெளிவரும் ‘அம்பர்’ எனும் திரவம், வாசனை திரவியம் மற்றும் பல்வேறு பயன்பாட்டுக்கு பயன்படுவதால், இது, கிலோ, பல லட்சம் ரூபாய்க்கு விலைபோகிறது.

வாசனை பொருட்களில் எத்தனையோ ரகங்கள் உண்டு. இதற்கெல்லாம் மேலாக அம்பர் எனும் விலை உயர்ந்த வாசனை திரவியம் உற்பத்தியாகும் விதம் குறித்து, பலரும் பல விதமாக கூறுகிறார்கள். ஆனால் அம்பர், திமிங்கலம் உமிழும் எச்சத்திலிருந்து உற்பத்தியாகிறது என்பதுதான் உண்மை.ஆழ்கடலில் வசித்து வரும் திமிங்கலம், அன்றாட உணவாக, கணவாய் மீனையே விரும்பி உட்கொள்கிறது. கூரிய முட்களை உடைய இந்த மீனை, சாப்பிடும்போது இதன் முட்கள் தொண்டையில் குத்தி விடும். இதன் காரணமாக ஜீரண சக்தியை இழக்கும் திமிங்கலம், தொண்டையில் மாட்டிக்கொண்ட முள்ளை வெளியேற்ற, வாந்தி எடுக்கும்போது ஒரு வகை திரவம் வெளியேறுகிறது. இதுவே திமிங்கலத்தின் எச்சம் என்பர். பெருங்கடலில் மிதந்து வரும் அம்பர், கடல் அலைகளால் கரைக்கு அடித்து வரும்போது, படிப்படியாக உருண்டை வடிவம் பெற்று, கடற்கரையில் ஒதுங்குகிறது. இது கருப்பு, வெள்ளை நிறமாக காணப்படும். அம்பர், உருண்டை ஒருவருக்கு கிடைத்து விட்டால் அதுவே அவருக்கு கிடைத்த பெரும் பொக்கிஷம். இதை ஆங்கிலத்தில் ‘அம்பர்கிரிஸ் ‘என அழைக்கின்றனர். பார்ப்பதற்கு அருவருப்பாக காணப்படும் இதை, நெருப்பால் சூடாக்கினால் மணம் கமழும் வாசனை வெளிவரும். பொதுவாக மேலைநாடுகளிலுள்ள கடற்கரையில் தான் அம்பர் உருண்டை கண்டெடுக்கப்படுகிறது. இதை எளிதில் அடையாளம் காண முடியாது. பரம்பரையாக கடல் தொழிலில் அனுபவம் உள்ளவர்களால் மட்டுமே காணமுடியும். இது தண்ணீரில் கரையாது. ஆனால் மதுபானங்களில் போட்டால் கரைந்து விடுகிறது. வாசனை திரவியங்களுடன் கலப்பதற்கும் மட்டுமன்றி, விலை உயர்ந்த மதுபானங்களின் வாசனைக்கும், உயிரோட்டம் கொடுக்கும் மூலப்பொருளாகவும் பயன்படுகிறது. அம்பர் உருண்டை, ரசாயன பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. கிலோ ஒன்றுக்கு பல லட்சம் ரூபாய் வரை மதிப்பிடுவார்கள். இதை கொண்டு தயாரிக்கப்படும் வாசனை திரவத்தை , துணியில் தடவினால், எத்தனையோ நாட்களுக்கு அதன் வாசனை நிலை கொண்டிருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *