தஞ்சாவூர்: “”வரும் 2012ம் ஆண்டுக்குள் 2.50 லட்சம் கிராமங்களுக்கு பிராட்பேண்ட் வசதி கொண்டு செல்லப்படும்,” என, மத்திய தகவல் தொழில் நுட்பத்துறை இணையமைச்சர் குருதாஸ் காமத் தெரிவித்தார். தஞ்சையில் அவர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
தொலைத்தொடர்புத்துறையை பொறுத்த வரை 3ஜி சேவை ஏற்கனவே பி.எஸ்.என்.எல்., – எம்.டி.என்.எல்., நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு உலக தகவல் தொழில் நுட்ப போட்டியில் இந்தியா வெகுவாக வளர்ந்துள்ளது.
வரும் ஆகஸ்ட், செப்டம்பர் மாதத்தில் தனியார் தொலைபேசி சேவை நிறுவனங்களும் 3ஜி வசதிக்குள் நுழைகின்றனர்.அதற்குள் பி.எஸ்.என்.எல்., – எம்.டி.என்.எல்., நிறுவனங்கள் மிகப்பெரிய அளவில் இச்சேவையில் மக்களிடம் வளர்ந்து விடும். இச்சேவையில் தனியார்களின் போட்டி நிலையிலும் பி.எஸ்.என்.எல்.,- எம்.டி.என்.எல்., மிகச்சிறந்த நிலையைத்தக்க வைக்கும்.”3ஜி’ சேவை வழங்கப்படுவதால் மிகவும் சிறந்த தொழில் நுட்பங்களை மொபைல் சேவை, தகவல் தொடர்புத்துறை போன்றவைகளில் வழங்க வழி வகுக்கிறது. இதில், சினிமாத்துறை, விளம்பரத்துறையும் உள்ளடக்கம்.சினிமா, விளம்பரங்கள் போன்றவைகளில் இத்தொழில்நுட்ப வசதியால் தங்களது தொழிலை விரிவாக்கம் செய்வது எளிதாகி விடுகிறது. அதிக பயன் கிடைக்கிறது. தவிர, இ.லேர்னிங், டெலி மெடிசின் போன்ற சேவைகளும் இதன் மூலம் கிடைக்கிறது.மத்திய அரசு இத்துறையில் அடுத்த திட்டம், நோக்கமாக நாட்டில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் பிராட்பேண்ட் (அகண்ட அலைவரிசை) சேவையை கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளது. இதனால், அனைத்து தகவல் மற்றும் தொழில் நுட்பத்தில் உள்ள வசதிகள், நவீனங்கள் கொண்டு செல்லப்படும்.
வரும் 2012ம் ஆண்டுக்குள் 2.50 லட்சம் கிராமங்களுக்கு பிராட்பேண்ட் வசதி கொண்டு செல்லப்படும். நடந்து கொண்டிருக்கும் மத்திய அரசின் ஐந்தாண்டு காலத்துக்குள் அனைத்து கிராமங்களுக்கும் இவ்வசதி சென்றடையும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. தபால் துறையில் உயர் தொழில் நுட்பங்கள் புகுத்தப்படுகிறது. சாதாரணமாக மணியார்டர் சில நாட்களில் உரிய இடங்களை சென்றடைகிறது. இதை தவிர்த்து, “இன்ஸ்டெண்ட் மணியார்டர் அல்லது மொபைல் மணியார்டர்’ என்பதை மொபைல் டெக்னாலஜி மூலம் அறிமுகம் செய்கிறோம். இதனால், மணியார்டர் செய்த சில நிமிடங்களில் பணத்தை பெற்றுக்கொள்ளும் வசதி ஏற்படுத்தப்படும். முதற்கட்டமாக சென்னை போன்ற நகரங்களிலும், அடுத்த ஆறு மாதத்துக்குள் தஞ்சை போன்ற அடுத்த கட்ட நகரங்களுக்கும் இச்சேவை அறிமுகப்படுத்தப்படும்.இவ்வாறு மத்திய தகவல் தொழில் நுட்பத்துறை இணையமைச்சர் குருதாஸ் காமத் கூறினார்.
Leave a Reply