வாஷிங்டன் : இந்தியா & அமெரிக்கா இடையிலான அணு ஒப்பந்தம் முழுமையாக அமலுக்கு வந்துள்ளது. இதையடுத்து, இந்தியாவுக்கு அமெரிக்க நிறுவனங்கள் யுரேனியம் சப்ளை செய்யும்.
கடந்த 2008ம் ஆண்டில் இந்திய அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய அணு ஒப்பந்தத்தில் பிரதமர் மன்மோகன்சிங்கும். அப்போதைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்சும் கையெழுத்திட்டனர். ஒப்பந்தப்படி இந்திய அணு உலைகளுக்கு தேவையான யுரேனியத்தை அமெரிக்கா சப்ளை செய்ய வேண்டும். இந்தியாவுடனான அணு வர்த்தகத்துக்கு சர்வதேச அளவில் விதிக்கப்பட்டு இருந்த 30 ஆண்டு கால தடை நீக்கப்பட்டது. இதையடுத்து இந்திய அணுமின் உலைகளை சர்வதேச ஆய்வுக்கு உட்படுத்துவதற்கான பாதுகாப்பு விதிமுறைகள் பற்றி சர்வதேச அணு சக்தி முகமையான ஐ.ஏ.இ.ஏ.வுடன் இந்தியா உடன்பாடு செய்து கொண்டது.
அமெரிக்க அதிபராக ஒபாமா பதவி ஏற்றதைத் தொடர்ந்து இந்த ஒப்பந்தம் அமலாக்கப்படுமா? என்ற சந்தேகம் எழுந்தது. கடந்த நவம்பரில் அமெரிக்கா சென்றிருந்த பிரதமர் மன்மோகன் சிங், ஒபாமாவை வெள்ளை மாளிகையில் சந்தித்துப் பேசினார். அப்போது அணு ஒப்பந்தம் முழுமையாக அமல்படுத்தப்படும் என்று ஒபாமா உறுதி அளித்தார்.
இந்த வாக்குறுதியை செயல்படுத்தும் முக்கிய நடவடிக்கையாக,இந்தியாவுடனான அணு ஒப்பந்தத்தை அமல்படுத்துமாறு அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலரி கிளிண்டனுக்கு ஒபாமா நேற்றுமுன்தினம் உத்தரவிட்டார். இதன்படி, சர்வதேச அணுசக்தி முகமையுடன் இந்தியா செய்து கொண்ட பாதுகாப்பு உடன்பாட்டுக்கும், அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவுடன் அணு தொழில்நுட்ப வர்த்தகம் செய்து கொள்ளவும் ஒபாமா பச்சைக் கொடி காட்டியிருக்கிறார்.
ஒப்பந்தப்படி மின் உற்பத்திக்கு பயன்படும் இந்திய அணு உலைகள் தனியாக பிரிக்கப்பட்டு சர்வதேச ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும். இதற்காக இந்தியா செய்துள்ள ஏற்பாடுகளையும் அமெரிக்கா அங்கீகரித்துள்ளது.
Leave a Reply