மதுரை : “”அரசு உயிர் காப்பீட்டு திட்டத்தில் சிகிச்சை செலவை தனியார் மருத்துவமனைகளைப் போல, அரசு மருத்துவமனைகளுக்கும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது,” என சுகாதாரத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசினார்.
மதுரையில் அரசு உயிர் காப்பீட்டு திட்ட செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நேற்று நடந்தது. பொது சுகாதாரத்துறை இணைஇயக்குனர் பஞ்சநாதன் வரவேற்றார்.
கூட்டத்தில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேசியதாவது: கலெக்டர்கள், மற்ற திட்டங்களைவிட இத்திட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அரசு மருத்துவமனைகளில் வசதி உள்ள நிலையில், கூட்டம் அதிகமாக வருகிறது. சீனியாரிட்டிபடி சிகிச்சை பெற காத்திருக்க வேண்டியுள்ளது. எனவே, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க இத்திட்டம் துவக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றாலும், அந்த மருத்துவமனைகளுக்கும் பங்களிப்பை வழங்க, முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதைவைத்து அங்கு வளர்ச்சி பணிகளை செய்யலாம். இவ்வாறு அமைச்சர் பன்னீர்செல்வம் பேசினார்.
முதன்மை செயலர் சுப்புராஜ் பேசியதாவது: இத்திட்டத்தில் இதுவரை 40 ஆயிரம் பேர் பயன் பெற்றுள்ளனர். 131 கோடி ரூபாய் இதுவரை செலவிடப்பட்டுள்ளது. இதில் 1.17 லட்சம் குடும்பங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இவர்கள் அனைவருக்கும் அடையாள அட்டை முழுமையாக போய்ச் சேரவில்லை. இத்திட்டத்தில் 560 மருத்துவமனைகள் இணைக்கப் பட்டுள்ளன. இதில் நூறு மருத்துவமனைகளே சுறுசுறுப்பாக செயல்படுகின்றன. மற்றவையும் இதுபோல செயல்பட வேண்டும். அப்போதுதான் காத்திருப்போர் பட்டியல் குறையும். இவ்வாறு சுப்புராஜ் பேசினார்.
Leave a Reply