புதுடில்லி : “முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்தினால், அது அணையை பாதிக்குமா? அணையின் நீர்மட்டம் 155 அடியை எட்டினால், அணை உடையும் என்பதற்கான உறுதியான ஆதாரங்களை கேரள அரசு சமர்ப்பிக்க வேண்டும்’ என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
முல்லைப் பெரியாறு அணை தொடர்பான வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில், ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சட்ட பெஞ்ச் முன், நடந்து வருகிறது.
நேற்றைய விசாரணையின் போது நீதிபதிகள் கூறியதாவது: முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக கேரள அரசு முன்வைத்த வாதங்கள் எல்லாம் தவறானவை. வார்த்தை ஜாலங்களே. அணையின் நீர்மட்டம் 155 அடியை எட்டினால், அணை உடைந்து விடும் என்பதற்கான உறுதியான ஆதாரங்களை கேரள அரசு சமர்ப்பிக்க வேண்டும்.
கடந்த 1924, 1943 மற்றும் 1961 ஆகிய மூன்று ஆண்டுகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அப்போது முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 152.35 அடியைக் கூட தொட்டுள்ளது; எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை.
எனவே, அணையின் நீர்மட்டத்தை உயர்த்தினால், அணைக்கு ஆபத்து ஏற்படும் என்பதற்கான உறுதியான ஆதாரங்கள் மற்றும் விவரங்கள் தேவை. அணையின் நீர்மட்டத்தை 136 அடிக்கு மேல் உயர்த்தக் கூடாது என, இன்று நீங்கள் கட்டுப்படுத்துகிறீர்கள். நாளை இந்த அணை உதவாது என, நீங்கள் கூறலாம். இதெல்லாம் சரியானதல்ல. நீங்கள் சொல்வதை கேட்டு நாங்கள் மிகுந்த வருத்தம் அடைந்துள்ளோம். இவ்வாறு நீதிபதிகள் கூறினர். இவ்வழக்கு விசாரணை இன்றும் நடக்கிறது.
Leave a Reply