நகரி : ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும், சித்தூர் மாவட்டம் குப்பம் தொகுதி எம்.எல்.ஏ.,வுமான சந்திரபாபு நாயுடு, தமிழ் பள்ளிக் கட்டடத்தை திறந்து வைத்தார்.
ஆந்திரா – தமிழகம் எல்லைப்பகுதியில் அமைந்துள்ள அலசந்தபுரம் கிராமத்தில், தாய்மொழியை தமிழாக கொண்டுள்ள மாணவர்களின் கல்வி வசதிக்காக, புதிதாக கட்டப்பட்ட தொடக்கப்பள்ளி கட்டடத்தை, சந்திரபாபுநாயுடு நேற்று முன்தினம் திறந்து வைத்தார்.
சந்திரபாபு நாயுடு கூறியதாவது: ஆந்திராவில் ஆளும் காங்கிரஸ் அரசு, என் மீது பழி தீர்க்கும் வகையில், குப்பம் தொகுதிக்கு அரசிடமிருந்து கிடைக்க வேண்டிய நலத்திட்டங்களை புறக்கணிக்கிறது. அடுத்தாக தெலுங்கு தேசம் கட்சி ஆட்சிக்கு வரும் போது, தொகுதி மக்களுக்கு கிடைக்க வேண்டிய அபிவிருத்தி திட்டங்களை அசல், வட்டியுடன் சேர்த்து அமல்படுத்தி, இங்குள்ள மக்களின் குறைகளை தீர்க்க நடவடிக்கை எடுப்பேன். இத்தொகுதியில் கடந்த 1989 முதல், வாக்காளர்கள் தொடர்ந்து என்னை வெற்றி பெறச் செய்து வருகின்றனர்.
இதற்கு நன்றிக் கடனாக, எனது உயிருள்ளவரை உங்களுக்காக போராடுவேன். தமிழக எல்லைப் பகுதியில் அமைந்துள்ள குப்பம் தொகுதி, ஆந்திர-தமிழக மாநில பிரிவினைக்கு முன், பாலாறு தண்ணீர் தொடர்பாக இரு மாநிலங்களுக்கிடையே ஒப்பந்தம் ஏற்பட்டது. அதன்படி குப்பம் பகுதி விவசாயிகள், பாசனத்திற்கு தண்ணீர் உபயோகப்படுத்தி கொள்ளும் நிலை ஏற்பட்டது.
ஆந்திர மாநில அரசு, பாலாற்றின் மீது கணேசபுரம் பகுதியில் அணைக் கட்ட, தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிப்பது வரவேற்கத்தக்கதல்ல. இப்பகுதி மக்களுக்கு பாலாற்று தண்ணீரில் உரிமை உள்ளது என, சுப்ரீம் கோர்ட்டும் கூறியுள்ளது. அணைக்கட்டு திட்டத்தை நிறைவேற்றுவதில், ஆந்திர – தமிழக அரசுகள் எதிரும், புதிருமாக செயல்படுவதால், இத்திட்டம் தொடர்ந்து பின்தங்கியுள்ளது. இவ்வாறு சந்திரபாபு நாயுடு கூறினார்.
Leave a Reply