இந்தியா ‘நம்பர்-1’ : தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி தக்க வைத்தது

tblfpnnews_6316339970கோல்கட்டா : டெஸ்ட் அரங்கில் “நம்பர்-1′ இடத்தை இந்திய அணி தக்கவைத்துக் கொண்டது. பரபரப்பான கோல்கட்டா டெஸ்டில், தென் ஆப்ரிக் காவை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 57 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. சுழலில் அசத்திய ஹர்பஜன் வெற்றிக்கு பக்கபலமாக இருந்தார். டெஸ்ட் தொடர் 1-1 என்ற கணக்கில் சமன் ஆனது.

இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. நாக்பூரில் நடந்த முதல் போட்டியில், இந்திய அணி இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது. முக்கியமான இரண்டாவது போட்டி, கோல் கட்டாவில் நடந்தது. முதல் இன்னிங்சில் தென் ஆப்ரிக்கா 296, இந்தியா 643/6 (டிக்ளேர்) ரன்கள் எடுத்தன. 347 ரன்கள் பின்தங்கிய நிலையில், இரண்டாவது இன்னிங்சை துவக்கிய தென் ஆப்ரிக்க அணி, 4 ம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 115 ரன்கள் எடுத்திருந்தது. ஆம்லா (49), பிரின்ஸ் (0) அவுட்டாகாமல் இருந்தனர்.

ஹர்பஜன் மிரட்டல்: கடைசி மற்றும் ஐந்தாவது நாள் ஆட்டம் நேற்று நடந்தது. வலது காலில் ஏற்பட்ட தசைப் பிடிப்பு காரணமாக இந்திய அணியில் ஜாகிர் இடம் பெறவில்லை. ஆடுகளம் சுழலுக்கு ஒத்துழைக்க ஹர்பஜன், மிஸ்ரா சிறப்பாக பந்து வீசினர். சற்று நேரம் தாக்குப்பிடித்த பிரின்ஸ் (23) ஹர்பஜனிடம் சரணடைந்தார். டிவிலியர்சை (3) சொற்ப ரன்களுக்கு அவுட்டாக்கினார் மிஸ்ரா. தொடர்ந்து சுழலில் அசத்திய ஹர்பஜன், டுமினி (6), ஸ்டைன் (1) விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

ஆம்லா சதம்: ஒரு புறம் விக்கெட்டுகள் விழுந்தாலும், மறுமுனையில் ஆம்லா பொறுப்புடன் ஆடினார். இவருடன் 8 வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த பார்னல் நல்ல ஒத்துழைப்புக் கொடுத் தார். இதைப் பயன்படுத்திக் கொண்ட ஆம்லா, டெஸ்ட் அரங்கில் 10 வது சதம் கடந்தார். இந்நிலையில் பார்னலை (22) வெளியேற்றி, திருப்பு முனை ஏற்படுத்தினார் இஷாந்த் சர்மா. இவரது துல்லிய வேகத்தில் அடுத்து வந்த ஹாரிசும் (4) நிலைக்க வில்லை.

“திரில்’ வெற்றி: பின்னர் கடைசி வீரராக களமிறங்கிய மார்கல், ஆம்லாவுடன் இணைந்து இந்தியாவுக்கு கடும் நெருக்கடி கொடுத்தார். ஒருவழியாக ஹர்பஜன் சுழலில் சிக்கினார் மார்கல் (12). தென் ஆப்ரிக்க அணி இரண்டாவது இன்னிங்சில் 290 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தோல்வி அடைந்தது. ஆம்லா, 123 ரன்களுடன் அவுட்டாகாமல் இருந்தார். நாக்பூர் போட்டியில் இன்னிங்ஸ் தோல்வி அடைந்த இந்திய அணி, கோல்கட்டாவில் அதற்கு பதிலடி கொடுத்தது. இவ்வெற்றியின் மூலம் டெஸ்ட் தொடர் 1-1 என சமன் ஆனது. தவிர, டெஸ்ட் அரங்கில் 124 புள்ளிகளுடன் தனது “நம்பர்-1′ இடத்தை இந்தியா தக்கவைத்துக் கொண்டது. 120 புள்ளிகளுடன் தென் ஆப்ரிக்கா அணி இரண்டாவது இடத்தில் உள்ளது. ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை தென் ஆப்ரிக்காவின் ஆம்லா கைப்பற்றினார்.

ரூ. 81 லட்சம் பரிசு: கோல்கட்டா டெஸ்டில், இந்திய அணி வெற்றி பெற்றதன்மூலம், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் வெளியிடப்படும், டெஸ்ட் அணிகளுக்கான ரேங்கிங் (தரவரிசை) பட்டியலில், 124 புள்ளிகளுடன் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டது. இதன் மூலம் வரும் ஏப்ரல் மாதம், ஐ.சி.சி., வழங்கும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் விருது மற்றும் ரூ. 81 லட்சத்தை முதன் முறையாக பெற உள்ளது. கடந்த 2003ல் ரேங்கிங் அறிமுகமானதில் இருந்து, இவ்விருதை ஆஸ்திரேலியா தான் 7 முறை பெற்றது. இதற்கு இப்போது இந்தியா முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

ஐ.சி.சி., ரேங்கிங்கில் “டாப்-5′ டெஸ்ட் அணிகள்:

ரேங்க் அணி புள்ளி
1 இந்தியா 124
2 தென் ஆப்ரிக்கா 120
3 ஆஸ்திரேலி யா 116
4 இலங்கை 115
5 இங்கிலாந்து 107

கடைசி கட்ட “டென்ஷன்’: கோல்கட்டா போட்டியின் கடைசி நாளான நேற்று, இந்திய அணி வெற்றிக்கு கடுமையாகப் போராடி வேண்டியிருந்து. தென் ஆப்ரிக்கா அணியின் முதல் 7 விக்கெட்டுகள் விரைவாக வீழ்ந்த நிலையில், 8 வது விக்கெட்டுக்கு ஆம்லாவுடன் ஜோடி சேர்ந்த பார்னல் நீண்ட நேரம் தாக்குப்பிடித்து ஆடினார். அதற்குப் பின் கடைசி வீரராக களமிறங்கிய மார்கல், இந்திய வெற்றியை தாமதப்படுத்தினார். ஆம்லா, மார்கல் ஜோடியை பிரிக்க, இந்திய அணிக்கு 20.4 ஓவர்கள் தேவைப்பட்டது. சேவக், சச்சின் என பவுலர்களை மாற்றிப் பார்த்தார் இந்திய கேப்டன் தோனி. ஆனால் ஆட்டம் முடிய கடைசி 13 நிமிடங்கள் (9 பந்துகள்) இருந்த நிலையில், மார்கலை அவுட்டாக்கி, இந்திய அணிக்கு “திரில்’ வெற்றி தேடித் தந்தார் ஹர்பஜன்.

இயற்கை சதி முறியடிப்பு: கோல்கட்டா டெஸ்ட் போட்டியில் ஆரம்பம் முதலே இந்தியாவின் கை ஓங்கியிருந்தது. எளிய வெற்றியை நோக்கி 2 வது இன்னிங்சில் பந்து வீசத் துவங்கிய இந்திய அணிக்கு, 4 ம் நாள் ஆட்டம் சிக்கலாக அமைந்தது. மழை மற்றும் போதிய வெளிச்சமின்மை காரணமாக, 34.1 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டது. இயற்கை சதியை முறியடித்து, கடைசி நாள் ஆட்டத்தில் தென் ஆப்ரிக்காவை வீழ்த்தியது. காயம் காரணமாக ஜாகிர் கான் பந்துவீசாத நிலையிலும் சாதித்து காட்டியது.

பவுலர்கள் காரணம்: தோனி: இந்திய கேப்டன் தோனி கூறுகையில், “” இப்போட்டியின் வெற்றிக்கு இந்திய பவுலர்கள் தான் முக்கிய காரணம். கடைசி நாள் ஆட்டத்தில் ஜாகிரும் இல்லை. இருப்பினும் ஹர்பஜன், மிஸ்ரா இணைந்து சிறப்பாக பந்து வீசினர். பார்முக்கு திரும்பிய இஷாந்த், முக்கிய கட்டத்தில் திருப்பு முனை ஏற்படுத்தினார். கும்ளே ஓய்வுக்குப் பின் தனது பணியை சிறப்பாக செய்து வருகிறார் ஹர்பஜன். கடுமையான விமர்சனங்கள் மற்றும் நெருக்கடிக்கு மத்தியில் ஹர்பஜன் சாதித்துக் காட்டியிருக்கிறார்,” என்றார்.

ஹர்பஜன் அபாரம்: கோல்கட்டா ஈடன் கார்டன் மைதானம், ஹர்பஜனுக்கு மிகவும் ராசியானது. இங்கு கடந்த 2001 ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 11 விக்கெட்டுகளை வீழ்த்தினார் ஹர்பஜன். தற்போது தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்டில்,8 விக்கெட்டுகள் வீழ்த்தி இந்திய அணிக்கு வெற்றிதேடிக் கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,”” ஈடன் கார்டன் மைதானம் எனக்கு மிகவும் ராசியானது. நேற்றைய கடைசி நாள் ஆட்டத்தில், 3 பவுலர்களை மட்டுமே இந்திய அணியில் இடம் பெற்றிருந்தனர். இருப்பினும் எங்கள் கடமையை சிறப்பாக செய்தோம். ஆட்டத்தின் கடைசி கட்டத்தில் நெருக்கடி அதிகம் இருந்தது. “நம்பர்-1′ இடத்தை தக்கவைத்துக் கொள்ள இந்திய அணிக்கு அனைத்து தகுதியும் உண்டு,” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *