இந்திய கலாசாரத்தை ஏற்றார் போலந்து மருமகள் : சென்னையில் இந்து முறைப்படி திருமண வைபவம்

posted in: மற்றவை | 1

சென்னை: இந்திய கலாசாரம், பழக்க வழக்கங்களால் கவரப்பட்ட போலந்து நாட்டு இளம் பெண், தமிழகத்தைச் சேர்ந்த வாலிபரை இந்து மத வழக்கப்படி திருமணம் செய்து கொண்டார்.

தேனி மாவட்டம், போடியை அடுத்த தேவாரத்தைச் சேர்ந்தவர் மோகன் தாஸ்; ஓய்வு பெற்ற வணிகவரித்துறை அலுவலர். இவரது மனைவி ஜெகதாம்பாள், ஓய்வு பெற்ற ஆசிரியை. இவர்களது மகன் செந்தில் குமார்(30). இவர், இளங்கலை பொறியியல் படிப்பை இந்தியாவிலும், முதுகலை பொறியியல் படிப்பை ஜெர்மனியிலும் முடித்தவர். தற்போது, சுவிட்சர்லாந்து நாட்டில் மென்பொருள் மேம்பாட்டு இன்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். போலந்து நாட்டைச் சேர்ந்தவர் டாடூஸ் டோப்பியராலா. இவரது கணவர் இறந்து சில ஆண்டுகள் ஆகின்றன. டோப்பியராலாவுக்கு மூன்று மகள், ஒரு மகன். இவரது இரண்டாவது மகள் அலெக்சாண்ட்ரா(27). எம்.ஏ., பட்டதாரியான இவர், அந்நாட்டின் நிதித்துறையில், நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார்.
பணியின் போது கிடைக்கும் இடைவெளியில், செந்தில், இன்டர்நெட்டில், சாட் செய்வது வழக்கம். அப்படி செய்யும் போது அலெக்சாண்ட்ராவுக்கும், செந்திலுக்கும் நட்பு ஏற்பட்டு அது காதலாக வளர்ந்தது.
செந்திலுடன் பழகியதில், அலெக்சாண்ட்ராவுக்கு இந்திய கலாசாரம், பழக்க வழக்கங்கள், சாஸ்திர சம்பிரதாயங்கள் தெரியவர அது அவருக்கு மிகவும் பிடித்து போய் விட்டது.
இதைத் தொடர்ந்து திருமணம் செய்தால், இந்து முறைப்படிதான் திருமணம் செய்வது என்று அலெக்சாண்ட்ரா பிடிவாதமாக இருந்துள்ளார். இதை செந்திலும் ஏற்றுக் கொண்டார். இவர்களது விருப்பம், இரு தரப்பு பெற்றோருக்கும் தெரிவிக்கப்பட்டது. செந்திலின் பெற்றோர் போலந்து சென்று அலெக்சாண்ட்ராவின் வீடு, குடும்பம், சுற்றுப்புறச் சூழல்களை பார்த்துள்ளனர். அவர்களுக்கு பிடித்துப் போகவே, அலெக்சாண்ட்ரா குடும்பத்தினரை தமிழகத்தில் உள்ள தங்கள் வீட்டிற்கு அழைத்தனர். அலெக்சாண்ட்ரா குடும்பத்தினருக்கும், தமிழக சூழல் பிடித்து விட்டது. இதைத் தொடர்ந்து இரு தரப்பினரும் உறவினர்களுடன் பேசி சென்னையில் திருமணம் செய்ய முடிவு செய்தனர். செந்திலின் தாய் ஜெகதாம்பாள், மாதா அமிர்தானந்தமயி தேவியின் பக்தையாக இருந்ததால், விருகம்பாக்கம் மாதா அமிர்தானந்தமயி மடத்தில் உள்ள திருமண மண்டபத்திலேயே திருமணம் வைத்துக் கொள்ள விரும்பினார். அதன்படி, நேற்று அந்த மண்டபத்தில், புரோகிதர் மந்திரம் ஓத, மங்கல வாத்தியம் இசைக்க, உறவினர்களும், நண்பர்களும் சூழ்ந்திருக்க, அக்னி புகை எழும்ப, காலை 8.30 மணிக்கு தேவாங்க செட்டியார் முறைப்படி மணமகள் அலெக்சாண்ட்ரா கழுத்தில், மணமகன் செந்தில் தாலி கட்டினார். மணமக்களை அனைவரும் வாழ்த்தினர். போலந்து நாட்டில் இருந்து வந்திருந்த அலெக்சாண்ட்ராவின் உறவினர்களும் திருமணத்தில் பங்கேற்றனர். வெளிநாட்டில் பிறந்த பெண், இந்திய கலாசாரத்தால், கவரப்பட்டு இந்திய மருமகளானதை அறிந்த விருகம்பாக்கம் பகுதி மக்கள் அங்கு கூடி ஆச்சர்யமாக பார்த்து ரசித்தனர்.

  1. Senthil Kumar

    அந்த செந்தில் குமார் நான் தான். அலெக்சாண்ட்ரா என் மனைவி. நன்றி தினமலர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *