புவனேஸ்வர்:பழைய பழக்க வழக்கங்களை உடைத் தெறியும் வகையில், ஒரிசாவில், மூதாட்டி ஒருவரின் இறுதி சடங்கை, ஆண்களின் துணையின்றி பெண்களே செய்து முடித்துள்ளனர்.ஒரிசா மாநிலம், புவனேஸ்வரிலிருந்து 500 கி.மீ., தொலைவில் அமைந்துள்ள நுவபரா மாவட்டம் காடியாலா கிராமத்தில் உள்ளது “மிஷன் சக்தி’ என்ற அமைப்பு.
இந்த அமைப்பை சேர்ந்த பெண்கள் அனைவரும் இணைந்து, ஆண்களின் துணையின்றி, மூதாட்டி ஒருவரின் இறுதி சடங்கை செய்து முடித்துள்ளனர்.
இதுகுறித்து, “மிஷன் சக்தி’ அமைப்பின் தலைவர் ட்ரூப்திராணி சிங் கூறியதாவது: கடியாலா கிராமத்தை சேர்ந்தவர் சபீதா பாக்(80). இவர் தன் விதவை மகள் சங்கீதா பாக்(39) உடன் வசித்து வந்தார். இந்நிலையில், கடந்த வாரம் சபீதா பாக் காலமானார். அவரது இறுதி சடங்குகளை நடத்துமாறு, அக்கிராமத் தினரிடம், சங்கீதா பாக் கேட்டுக் கொண்டார்.ஆனால், அதை செய்ய, அந்த கிராமத்தை சேர்ந்த ஆண்கள் யாரும் முன் வரவில்லை. எனவே, இந்து மத முறைப்படி இறுதி சடங்குகள் செய்ய, அவர் உள்ளூரை சேர்ந்த அமைப்பான, “மிஷன் சக்தி’யின் உதவியை நாடினார்.இதையடுத்து, எங்கள் அமைப்பின் உறுப்பினர்கள் அனைவரும் கூடி, மூதாட்டியின் இறுதி சடங்குகளை நடத்துவது என தீர்மானித்தோம்.இதையடுத்து, ஆண்களின் துணையின்றி, நாங்களே மூதாட்டியின் உடலை சுடுகாட்டிற்கு எடுத்து செல்வது உட்பட, அனைத்திற்கும் ஏற்பாடு செய்தோம். அங்கு சென்று அவருக்கு இந்து மத முறைப்படி இறுதி சடங்குகள் செய்யப்பட்டது.இவ்வாறு ட்ரூப்திராணி சிங் கூறினார்.
Leave a Reply