கோவை: “உலகளாவிய பொருளாதார சூழலுக்கு ஏற்ப கல்வி முறையில் மாற்றம் கொண்டு வர வேண்டும்,” என்று இந்திய கல்லூரிகள் சங்கத் தலைவர் சர்மா கூறினார்.
இந்திய கல்லூரிகள் சங்கத்தின் 16வது தேசிய மாநாடு, கோவை பி.எஸ்.ஜி., கலை அறிவியல் கல்லூரியில் இன்று துவங்கியது. இந்தியாவில் உயர்கல்வி சந்தித்து வரும் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பாக நடைபெறும் இம்மாநாட்டில், 17 மாநிலங்களை சேர்ந்த கல்லூரி முதல்வர்கள், துறைத் தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
துவக்க விழாவில் இந்திய கல்லூரிகள் சங்கத்தின் தலைவர் சர்மா பேசியதாவது:
அடுத்த ஐந்து ஆண்டுகளில் உயர்கல்வித் துறையின் வளர்ச்சி வேகமாக இருக்கும். காலத்துக்கேற்ப மாற்றங்களை செய்யாவிட்டால் வளர்ச்சி ஆரோக்கியமானதாக இருக்காது. எதிர்காலம் உலகளாவிய பொருளாதார சூழலில் இருக்கும் என்பதால், அதற்கேற்ப நம் மாணவர்களை தயார்படுத்த வேண்டியது முக்கியம்.
இதற்கேற்ற புதிய கொள்கையை வகுக்க வேண்டும். கல்வி முறையிலும் மாற்றம் கொண்டு வர வேண்டும். இன்றைய மாணவர்கள் கல்வியில் தரத்தை மட்டுமல்லாமல், காலத்துக்கேற்ப பயனுள்ளதாகவும் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். உலகளாவிய தகவல் தொழில் நுட்பம்தான் உயர்கல்வி வளர்ச்சிக்கு முக்கிய அம்சம். நம் மாணவர்களுக்கு அதற்கேற்ற தரமான கல்வியை வழங்கத் தவறினால், அவர்கள் வெளிநாடு செல்வதை தடுக்க முடியாது. உயர்கல்வி தரமான வளர்ச்சி பெற, அரசின் குறுக்கீடு இருக்கக் கூடாது. 2025ம் ஆண்டுக்குள் தகுதியான 30 சதவீதம் பேரையாவது சென்றடைவதாக உயர்கல்வியின் விரிவாக்கம் இருக்க வேண்டும்.
ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களை உலகளவில் பரஸ்பரம் பகிர்ந்து கொள்ள வேண்டும். வெளிநாடுகளில் இந்திய கல்வி நிறுவனங்களை நிறுவலாம். வெளிநாட்டு கல்வி நிறுவனங்களை இந்தியாவுக்குள் அனுமதிக்கலாம். வழங்கப்படும் பட்டங்களுக்கு உலகளாவிய, பரஸ்பர அங்கீகாரம் வழங்கலாம். இவ்வாறு, சர்மா பேசினார்.
தமிழ்நாடு தனியார் கல்லூரிகள் நிர்வாகிகள் சங்கத் தலைவர் ஆறுச்சாமி பேசுகையில், “இன்று இந்தியாவில் 87 சதவீத கலை, அறிவியல் கல்லூரிகள், 98 சதவீத பொறியியல், ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகள் தனியாருக்கு சொந்தமானவை. இந்தியாவை விட குறைந்த மக்கள் தொகை கொண்ட அமெரிக்காவில் 4,800 பல்கலைகள், 2,500 கல்லூரிகள் உள்ளன.
ஆனால் அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் 450 பல்கலைகள், 22,000 கல்லூரிகள் மட்டுமே உள்ளன. பல்கலைகளின் எண்ணிக்கையை உயர்த்த ஒருமை பல்கலைகளை துவங்க அரசு எடுத்துள்ள முடிவை எதிர்க்க கூடாது. தகுதியான கல்லூரிகளை பல்கலைகளாக மாற்ற அனுமதிக்க வேண்டும்.
பள்ளிக் கல்வி முடிப்பவர்களில் 10 சதவீதத்தினர் மட்டுமே உயர்கல்வி பெறுகின்றனர். அடுத்த மூன்று ஆண்டுகளில் 13-15 சதவீதமாக உயர்த்த பல்கலை மானியக்குழு (யு.ஜி.சி) இலக்கிட்டுள்ளது. சமீபத்தில் ஏற்பட்ட சிறு குளறுபடிகளால் நிகர்நிலை பல்கலைகள் ரத்து பிரச்னை வந்தது. அப்பல்கலைகளில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்து கொள்ள முடியும்,” என்றார்.
பாரதியார் பல்கலை கல்லூரிகள் முதல்வர்கள் சங்கத் தலைவர் முத்துசாமி பேசுகையில், “உலகம் முழுவதும் இன்று உயர்கல்விக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. கற்பிக்கும் முறையிலும் தொழில் நுட்பம் புகுந்து விட்டது. அமெரிக்காவில் 250 ஆன்லைன் பல்கலைகள் உள்ளன. நம் பல்கலைகளின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும்.
உயர்கல்வியின் தரத்தை மேம்படுத்த பல்வேறு அமைப்புகளின் குறுக்கீடுகள் இல்லாமல், பொது அமைப்பு உருவாக்க வேண்டும். கல்வி முறையில் மாற்றம் கொண்டு வர வேண்டும். தொழிற்துறைக்கு ஏற்ற கல்வி அளிக்க, தொழில் துறையினர் ஒத்துழைக்க வேண்டும். வெளிநாட்டு பல்கலைகளை இந்தியாவுக்குள் அனுமதிக்க தெளிவான நடைமுறைகளை வகுக்க வேண்டும்,” என்றார்.
கர்நாடக மாநில உயர்கல்வி கவுன்சில் துணைத் தலைவர் சவாதத்தி பேசுகையில், “தரமான ஆசிரியர்கள் இல்லாதவரை, உள்கட்டமைப்பு, வளாக நேர்காணல் ஆகியவை சிறப்பாக இருந்தும் பயன் இல்லை. நமக்கு நாளை வெறும் தலைவர்கள் தேவையில்லை. சிந்தனையாளர்களும், நற்குணங்கள் உள்ளவரும் தேவை.
அதற்கேற்ப பள்ளிக் கல்வி முறையில் மாற்றம் தேவை. ஆசிரியர்கள் ‘ரோல் மாடல்களாக’ இருக்க வேண்டும். இன்று திறமையானவர்கள் கிராமங்களில் இருந்துதான் வருகின்றனர். கிராமப்புற கல்விக்கு முக்கியத்துவம் தர வேண்டும். சிறந்த கல்வியால் மட்டுமே நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த முடியும்,” என்றார்.
பி.எஸ்.ஜி., கலை அறிவியல் கல்லூரி முதல்வர் ஷீலா ராமச்சந்திரன், இந்திய கல்லூரிகள் கூட்டமைப்பின் செயலாளர் தியாகி உட்பட பலர் பங்கேற்றனர். பிப். 6ம் தேதி (நாளை) நிறைவு பெறும் மாநாட்டின் பரிந்துரைகள், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை, யு.ஜி.சி.,தேசிய தொழில் நுட்பக் கல்வி கவுன்சில் ஆகியவற்றுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன.
Leave a Reply