சென்னை: ஆளும்அரசு எந்த நடவடிக்கை எடுத்தாலும் அதற்கு எதிராக அறிக்கை தயார் செய்து ஏட்டிக்கு போட்டி என செயல்படுவதுதான் இன்றைய எதிர்கட்சியின் பண்பாடாக இருக்கிறது என தமிழக முதல்வர் கருணாநிதி எதிர்கட்சிகளுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள கேள்வி – பதில் அறிக்கையில் கூறியிருப்பதாவது: மார்க்., கம்யூ., தலைவர்களில் ஒருவரான உ . ரா., வரதராசன் மறைவு குறித்து எழுப்பியுள்ள கேள்விக்கு ; அருமைத்தோழர் உ.ரா. வரதராசன் நம் மத்தியிலே அவரது தொண்டுள்ளத்தையும், கொள்கை உறுதியையும், மக்கள் பணியையும், அன்பான நட்பு, அரசியல் நாகரிகம் ஆகியவற்றையும் நினைவு அலைகளாக மிதக்க விட்டுவிட்டு பிரிந்துவிட்டார், ஆம் மறைந்து விட்டார்.
அவருடைய அரசியல் பணி அளவிட முடியாதது. நான் டில்லிக்கு சென்றபோதும், சுர்ஜீத்சிங்குடன் என்னை சந்தித்து என்னை வாசல் வரை வந்து வழியனுப்பி வைப்பார். நேப்பியர் பூங்காவை இவரது கோரிக்கைக்காக மே தின பூங்காவாக மாற்றினேன். மத்திய தர மக்களிடமும், பாட்டாளி வார்க்கத்தினருடனும் அவர் இன்றும் மறையா புகழ் என்றைக்கும் மறையாது. நாடாளுமன்ற கூட்டத்தொடர் குறித்து அவர் கூறுகையில்: இக்கூட்டம் நடக்கும் முன்பாக சுமுகமாக நடத்த ஒத்துழைப்பு தாருங்கள் என பிரதமர் , சபாநாயகர் நடத்திய பேச்சு, வேண்டுகோள் வரவேற்கத்தக்கது.
யானைமலையை உடைத்து சிற்பக்கலை நகரமாக்கப்போவதாக கம்யூ., மற்றும் ம.தி.மு.க., போராட்டம் நடத்தப்போவதாக கூறியுள்ளனரே ?
அரசு சார்பில் எந்த அறிக்கையும் வெளியிடவில்லை என அமைச்சர் தங்கம் தென்னரசு அறிக்கை வெளியிட்டிருக்கிறார். இதற்கு பி்ன்னரும் போராட்டம் என அறிவித்திருக்கிறார்கள். இதில் இருந்தே மக்கள் அவர்கள் நோக்கத்தை புரிந்து கொள்வார்கள். யாரோ அறிக்கை விட்டு அழைக்கி்ன்றனர் என்பதற்காக இன்னமும் பகுத்தறிவை பயன்படுத்த தவறாத பாண்டியன் போன்றவர்கள் அவர்களோடு சேர்ந்து கொண்டு யானைமலை சலோ, சலோ என்பதுதான் ஆச்சரியமாக இருக்கிறது.
தி.மு. க., தீர்மானத்திற்கு கண்டனம்: முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினை குறித்து அதன் வலுவினை அறிய மீண்டும் ஒரு குழு ஐந்து பேரைக் கொண்டு அமையும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதையும் – அந்தக் குழுவில் ஐவரில் ஒருவராக இணைந்து கருத்து தெரிவிப்பதால் எந்தப் பயனும் விளையப் போவதில்லை என்றும் தி.மு. கழகப் பொதுக் குழுவில் நிறைவேற்றிய தீர்மானத்திற்கு சிலர் கண்டனம் தெரிவித்து உங்களைத் தாக்கி அறிக்கை விடுத்திருக்கிறார்களே?
தி.மு. கழகப் பொதுக்குழுவில் முல்லைப் பெரியாறு அணை குறித்து உச்ச நீதிமன்றம் அமைக்கும் குழுவில் ஐவரில் ஒருவராக தி.மு.கழகச் சார்பிலும் இடம் பெறக்கூடும் என்று நினைத்துக்கொண்டு – அதை வன்மையாகக் கண்டித்து ஒரு நீண்ட அறிக்கை தயாரித்து வைத்திருந்தார்களாம். அதற்கு வாய்ப்பு இல்லாமல், தி.மு. கழகப் பொதுக்குழு அந்த ஐவர் குழுவிலே இடம் பெறுவதில்லை என்று அறிவித்துவிட்டதால், ஏமாற்றமடைந்து அவசர அவசரமாக முதலில் தயாரித்து வைத்திருந்த நீண்ட அறிக்கையைத் தூக்கிப்போட்டுவிட்டு, கழகப் பொதுக்குழுவின் தீர்மானத்தைக் கண்டனம் செய்து புதிய அறிக்கையை வெளியிட்டார்களாம்.இப்படி எதிலும் ஏட்டிக்குப்போட்டிதான் இன்றைய எதிர்க்கட்சியின் பண்பாடு என்பதை பொது மக்கள்தான் புரிந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
Leave a Reply