சென்னை : தமிழ்நாட்டில் முதல்முறையாக, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் (ஐ.ஓ.பி.) நடமாடும் ஏடிஎம் மையத்தை துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் நடமாடும் ஏ.டி.எம். மையம் தொடக்க விழா, தலைமைச் செயலகத்தில் நேற்று நடந்தது.
வங்கியின் நிர்வாக இயக்குநர் எஸ்.ஏ.பட் தலைமை வகித்தார். துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், நடமாடும் ஏ.டி.எம். மையத்தை தொடங்கி வைத்தார்.
பின்னர், ஐ.ஓ.பி. பொது மேலாளர் டி.தேனப்பன் கூறியதாவது:
தமிழகத்தில் முதல் முறையாக நடமாடும் ஏடிஎம் மையத்தை தொடங்கியுள்ளோம். முற்றிலும் குளிரூட்டப்பட்ட காரில் இந்த ஏடிஎம் மையம் செயல்படுகிறது. வடசென்னையில் உள்ள ராயபுரம் & புனித தெரசா பள்ளி, வண்ணாரபேட்டை & அகஸ்தியா குடியிருப்பு, பாரிமுனை & உயர் நீதிமன்றம், வியாசர்பாடி & கண்ணதாசன் நகர் (மின்வாரிய அலுவலகம்), வால்டாக்ஸ் ரோடு & ரெட்டை பிள்ளையார் கோயில் ஆகிய இடங்களில் இந்த ஏடிஎம் வண்டி நிற்கும்.
முதல்முதலாக நடமாடும் ஏடிஎம் மையத்தை உருவாக்கியுள்ளோம். மக்களின் பயன்பாட்டை பொறுத்து நடமாடும் ஏடிஎம் எண்ணிக்கையை அதிகப்படுத்துவோம். சென்னை மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் இந்த வசதியை விரிவுப்படுத்தும் திட்டமும் உள்ளது.
இவ்வாறு டி.தேனப்பன் கூறினார்.
இந்நிகழ்ச்சியில், ஐஓபி செயல் இயக்குநர்கள் ஒய்.எல்.மதான், நூப்பூர் மித்ரா, துணை பொதுமேலாளர் வீரப்பன், உதவி பொது மேலாளர் கே.பார்த்தசாரதி (கதீட்ரல் கிளை), அகில இந்திய ஐஓபி ஊழியர் சங்க துணைத்தலைவர் என்.ஸ்ரீதரன், உதவி பொதுச் செயலாளர் பாலசுப்பிரமணியன், தேசிய செயற்குழு உறுப்பினர் வாசு, தலைமைச் செயலக கிளை செயலாளர் ஆர்.குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர்.
Leave a Reply