புதுச்சேரி:கபில்சிபல் அணுகுமுறையால் கல்வித் திட்டத்தில் குறைபாடு இருந்து வருகிறது என, இந்திய கம்யூ., தேசிய செயலர் ராஜா பேசினார்.
அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் 27வது தேசிய மாநாடு, புதுச்சேரி என்.டி., மகாலில் நடந்து வருகிறது. மாநாட்டின் இரண்டாம் நாளான நேற்று, “கல்வியில் இன்றைய நெருக்கடி’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. இந்திய கம்யூ., தேசிய செயலர் ராஜா பேசியதாவது:புனேவில் நேற்று முன்தினம் நடந்த வெடிகுண்டு தாக்குதல் சம்பவத்தை, அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் வன்மையாகக் கண்டிக்கிறது. இந்த குண்டு வெடிப்புக்கு காரணம், உள்நாட்டு, வெளிநாட்டு சதியா என மக்களுக்கு மத்திய அரசு விளக்க வேண்டும். மத்திய அமைச்சர் கபில் சிபல் அணுகுமுறையால், கல்வித் திட்டத்தில் குறைபாடு இருந்து வருகிறது.
ஆதிதிராவிட, மலைவாழ் மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு கல்வி வசதியை விரிவாகச் செய்து தருவதற்கான எந்தவொரு அணுகுமுறையும் அவரிடம் இல்லை. சரியான அணுகுமுறை இல்லாததால் கல்வி, வியாபாரமாக ஆகியுள்ளது. எனவே, மத்திய அமைச்சர் கபில் சிபலின் அணுகுமுறையில் மாற்றம் தேவை. இல்லாவிட்டால் அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தினர் போராட்டம் நடத்தி, இந்த அரசை அதிகாரத்தில் இருந்து நீக்க வேண்டும். இவ்வாறு ராஜா பேசினார்.
Leave a Reply