மும்பை:கைகழுவிய தண்ணீரில் தேநீர் தயாரித்து கைதிகளுக்கு கொ டுத்த தானே மாவட்ட சிறைக்கு, மும்பை ஐகோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது.குற்றம் செய்தவர்களை தண்டிக்க தான் சிறை.
இருப்பினும், பெரும்பாலான சிறைகளில் கைதிகள் மிருகங்களை விட கேவலமாக நடத்தப்படுகின்றனர். மகாராஷ்டிர மாநிலம், தானே மாவட்டத்தில் உள்ள கல்யாண் அதர்வாடி சிறை கைதிகள் 170 பேர் ஒன்று சேர்ந்து கையெழுத்திட்டு, சிறையின் நிலைமையை விளக்கி, மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:சிறையில் வழங்கப்படும் உணவுகள் மகாமட்டமாக உள்ளன. சிறை கேன்டீனில் உணவுகளின் விலை வெளியே ஓட்டல்களில் விற்பதை விட இரண்டு மடங்கு அதிகம். சுகாதாரமற்ற முறையில் கைதிகளுக்கு அளிக்கப்படும் உணவால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை ஐந்து பேர் இறந்து விட்டனர். ஒரு நாள் எங்களுக்கு கொடுக்கப்பட்ட தேநீர் துர்நாற்றம் அடித்தது. விசாரித்ததில் கை கழுவிய அழுக்கு நீரிலிருந்து தேநீர் தயாரித்து எங்களுக்கு கொடுக்கப்பட்டது தெரிந்தது.
இந்த சிறையில் உள்ளவர்களுக்கு மருத்துவ உதவி செய்யப்படுவது கிடையாது. மருத்துவமனைக்கு வரும் டாக்டர்கள் அரைமணி நேரம் கூட தங்குவது கிடையாது. அந்த டாக்டரை பார்ப்பதற்கும் சிறை அதிகாரிகளுக்கு பணம் கொடுக்க வேண்டியுள்ளது.
வீட்டிலிருந்து என்றாவது உறவினர்கள் எடுத்து வரும் உணவையும், எங்களுக்கு கொடுக்க அதிகாரிகள் மறுத்து விடுகின்றனர். எங்களுக்கு வரும் மணியார்டர்களை, பெறுவதற்கு சிறை அதிகாரிகளுக்கு, கணிசமான கமிஷன் கொடுத்தால் தான், பணத்தை பெற முடியும் நிலை உள்ளது.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி தர்மதிகாரி, கடும் கோபம் கொண்டார். அதர்வாடி சிறையில் நடக்கும் விஷயங்கள் அனைத்தையும் தானே மாவட்ட நீதித்துறையை சேர்ந்த அதிகாரி, உடனடியாக ஆய்வு செய்து, நான்கு வாரத்தில் அறிக்கை சமர்பிக்கும் படி, உத்தரவிட்டுள்ளார். “கைதிகள் என்றாலும் அவர்களுக்கு அடிப்படை உரிமைகள் உள்ளன. அவற்றை நாம் அளித்தே ஆக வேண்டும். கோர்ட்டில் சமர்பிக்கப்படும் அறிக்கை உண்மையானதாக இருக்க வேண்டும். இந்த அறிக்கையில் ஏதாவது தில்லுமுல்லு செய்யப்பட்டிருந்தால் கடுமையான பின்விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்’ என நீதிபதி தர்மதிகாரி தெரிவித்துள்ளார்.”விசாரணை கைதிகளை உடனடியாக விசாரித்து விடுவிக்க வேண்டும். நீண்ட நாள் அவர்களை இழுத்தடிக்கக்கூடாது. மும்பை ஆர்தர் சாலை சிறை, எரவாடா சிறையில் உள்ள நிலைமை குறித்தும் அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும்’ என, நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
Leave a Reply