காரைக்காலில் புதிதாக தேசிய தொழில்நுட்ப நிறுவனம் (என்.ஐ.டி.,) அமைக்க மத்திய அரசு முடிவு செய்து, இதற்காக 320 கோடி ரூபாய் ஒதுக்கவும் தீர்மானித்துள்ளது.
என்.ஐ.டி., கட்டுமானப் பணிகளுக்காக காரைக்கால் பூவம் பகுதியில் 300 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு, அடுத்த மாதம் அடிக்கல் நாட்டு விழா நடக்க உள்ளது. வரும் கல்வியாண்டிலேயே என்.ஐ.டி., துவக்கப்பட உள்ளதால், தற்காலிகமாக அண்ணா அரசு கலைக் கல்லூரியில் என்.ஐ.டி., வகுப்புகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
அகில இந்திய என்.ஐ.டி., இயக்குனர் மோகன்தாஸ் தலைமையில் திருச்சி என்.ஐ.டி., இயக்குனர் சிதம் பரம், என்.ஐ.டி., விரிவுரையாளர் சுவாமிநாதன், மத்திய பொதுப்பணித் துறை திருச்சி மண்டல செயற் பொறியாளர் ராம்ராஜ் அடங்கிய குழுவினர் நேற்று காரைக்கால் வந்தனர். தற்காலிகமாக என்.ஐ.டி., வகுப்புகள் நடக்கவுள்ள அண்ணா அரசு கலைக் கல்லூரியில் உள்ள வகுப்பறைகள் மற்றும் ஆய்வகங்களை பார்வையிட்டனர். மேலும், என்.ஐ.டி., அமைக்க தேர்வு செய்யப் பட்ட இடத்தையும் பார்வையிட்டனர்.
பின், அகில இந்திய என்.ஐ.டி.,க்களின் இயக்குனர் மோகன்தாஸ் கூறியதாவது:
காரைக்காலில் என்.ஐ.டி., அமைப்பதற்காக தேர்வு செய்யப்பட்ட இடம் ஆய்வு செய்யப்பட்டது. வரும் கல்வியாண்டில் காரைக்கால் என்.ஐ.டி., வகுப்புகளுக்கான அட்மிஷன் நடக்கும். தற்காலிகமாக அண்ணா கலைக் கல்லூரியில் வகுப்புகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. புதிதாக துவக்கப்படும் என்.ஐ.டி., என்பதால் தரமான ஆய்வகங்கள், வகுப்பறைகள் உள்ளிட்ட பிற வசதிகள் தேவை. இதற்காக கல்லூரியில் உள்ள வசதிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
என்.ஐ.டி., அமைப்பதற்காக தேர்வு செய்யப்பட்ட இடத்தில் தண்ணீர், மின்சாரம், போக்குவரத்து, பாதுகாப்பு வசதிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இது குறித்து மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டு, பணிகள் துவங்கும். முதல் கட்டமாக எலக்ட்ரிக்கல் கம்யூனிகேஷன், எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய மூன்று பிரிவுகள் ஆரம்பிக்கப்பட உள்ளன. இவ்வாறு மோகன்தாஸ் கூறினார்.
திருச்சி என்.ஐ.டி., இயக்குனர் சிதம்பரம் கூறியதாவது:
மூன்று பாடப் பிரிவுகளில் ஒவ்வொரு பிரிவிற்கும் 30 சீட்கள் வீதம் மொத்தம் 90 மாணவர்கள் முதலாம் ஆண்டுக்கு அட்மிஷன் நடக்கும். இதில் 45 சீட்கள் புதுச்சேரி, காரைக்கால், அந்தமான் பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கும், 45 சீட்கள் அகில இந்திய அளவில் மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. நான்காம் ஆண்டு முதல் ஒவ்வொரு பிரிவிலும் மாணவர்களின் எண்ணிக்கை 60 சீட்டாக உயர்த்தப்படும். நான்கு ஆண்டுக்கு பின், எம்.சி.ஏ., எம்.பி.ஏ., எம்.டெக்., உள்ளிட்ட வகுப்புகள் துவக்கப்பட உள்ளன. இந்த என்.ஐ.டி.,க்கு எட்டு விரிவுரையாளர்கள், ஒன்பது உதவியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அடுத்த ஆண்டு முதல் விரிவுரையாளர்களின் எண்ணிக்கை உயர்த்தப்படும். தற்காலிகமாக இயங்க உள்ள அண்ணா கல்லூரி வகுப்புகள் மற்றும் ஆய்வக வசதிகளை மேம்படுத்த, 37 லட்சம் ரூபாய் மத்திய அரசிடம் கோரப்பட்டுள்ளது. இவ்வாறு சிதம்பரம் தெரிவித்தார்.
Leave a Reply