சமையல் எரிவாயு விலையை ரூ 100 உயர்த்த பரிந்துரை : பரேக் அறிக்கையை அரசு ஏற்குமா

posted in: மற்றவை | 0

tblfpnnews_31813776494புதுடில்லி : “சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை 100 ரூபாயும், மண்ணெண்ணெய் விலை லிட்டருக்கு 6 ரூபாயும் அதிகரிக்கலாம்’ என, கிரித் பரேக் கமிட்டி சமர்ப்பித்த அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

எரிபொருட்களின் விலைகள் குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட, கிரித் பரேக் கமிட்டி, தன் அறிக்கையை, மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தியோராவிடம் நேற்று சமர்பித்தது. அதன் பின், கிரித் பரேக் கூறியதாவது: பெட்ரோலிய பொருட்கள் தொடர்பாக, அரசின் தற்போதைய விலை நிர்ணய கொள்கை, நிலையானது அல்ல. தற்போது பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் மற்றும் சமையல் எரிவாயு ஆகியவற்றின் சில்லரை விலையை, பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்ள அரசு, அனுமதிக்கவில்லை. இதனால், எண்ணெய் நிறுவனங்களுக்கு வருவாய் இழப்பு மற்றும் அரசு மானியம் வழங்க வேண்டிய நெருக்கடி ஆகியவை ஏற்படுகிறது. எனவே, மண்ணெண்ணெய் மற்றும் சமையல் எரிவாயு ஆகியவற்றிற்கு குறிப்பிட்ட அளவு, அரசு தொடர்ந்து மானியம் வழங்கலாம்.

பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலை நிர்ணயத்தை அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயத்தை அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவித்தால், பெட்ரோல் விலை லிட்டருக்கு மூன்று ரூபாயும், டீசல் விலை மூன்றுமுதல் நான்கு ரூபாயும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. மேலும், சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலையை 100 ரூபாயும், மண்ணெண்ணெய் லிட்டருக்கு ஆறு ரூபாயும் உயர்த்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து, மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தியோரா கூறுகையில்,”கிரித் பரேக் கமிட்டி, சமர்ப்பித்த அறிக்கையை ஆய்வு செய்த பின், அதை அரசு அல்லது கேபினட் முன்னிலையில், இன்னும் ஒரு வாரத்தில் தாக்கல் செய்யப்படும்’ என்றார். மேலும் நிர்வாக நடைமுறையில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்படலாம் என்ற கருத்து எழுந்த போதும், பெட்ரோல் விலையை மட்டும் கம்பெனியின் விலைக்கு அனுமதிக்கலாம் என்ற கருத்து எழுந்திருக்கிறது. டீசல் என்பது விலைவாசியுடன் சம்பந்தப்பட்டதால், அதை நேரடியாக சந்தை விலைக்கு உட்படுத்த அரசு தற்போது விரும்பவில்லை. அதே சமயம் எண்ணெய் நிறுவனங்கள் சந்திக்கும் நஷ்டத்தையும் ஒரு சேர சுமக்கமுடியாத நிலை காணப்படுகிறது. கிரித் பரேக் அறிக்கையை அப்படியே அரசு ஏற்குமா ,அது எப்போது நடைமுறைப் படுத்தப்படும் என்பதும் அமைச்சரவை கூடி கொள்கை முடிவு எடுத்து அமல்படுத்தப்பட வேண்டிய விஷயமாகும். அதுவரை பெட்ரோல், டீசல் விலை உயர்வு அடிக்கடி பேசப்படும் விஷயமாக இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *