சிங்கப்பூர்: சிங்கப்பூரின் முதல் சூதாட்ட கிளப், சீனப் புத்தாண்டான புலிப் புத்தாண்டின் போது திறக்கப்பட்டது.மலேசியாவின் மிகப்பெரிய நிறுவனமான “ஜென்ட்டிங்க் க்ரூப்’ இக்கிளப்பை நிறுவியுள்ளது.
22 ஆயிரத்து 560 கோடி ரூபாய் செலவில் இந்த நிறுவனம் அமைத்துள்ள பொழுதுபோக்கு வளாகத்தில், இந்த கிளப் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், சிங்கப்பூரின் சுற்றுலா மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவரை சிங்கப்பூரில் சூதாட்ட கிளப்புக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. இப்போது அதன் பொருளாதார வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு, இதற்கு அனுமதி அளிக்கப்பட்டிருக் கிறது. இருப்பினும், சிங்கப்பூர்க்காரர்கள் சூதாட்டத்துக்கு அடிமையாகிவிடக் கூடாது என்பதற்காக, சூதாட்டத்தில் பங்கேற்க விரும்பும் அவர்கள் மட்டும் மூவாயிரத்து 500 ரூபாய் கட்டணம் செலுத்தினால் தான் அனுமதி அளிக்கப்படும்.
“ரிசார்ட்ஸ் வேர்ல்டு சென்டோசா’ என்ற சுற்றுலா வளாகத்தில் இயங்கும் அந்த கிளப்பில் சூதாட்டம் மட்டுமல்லாது யுனிவர்சல் ஸ்டூடியோ தீம் பார்க், ஓட்டல்கள், மற்றும் இதர வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால், சூதாட்டம் ஆடுபவர்கள் மட்டுமல்லாது சுற்றுலாவுக்கு வரும் மிகப்பெரிய தொழிலதிபர்களையும் ஈர்க்க முடியும் என்று அந்நாட்டு அரசு நம்பிக்கை கொண்டிருக்கிறது.
உள்நாட்டினர் கட்டணம் கட்ட வேண்டும் என்பதோடு, 21 வயதுக்குட்பட்டவர்களுக்கு மது விடுதிகளுக்குள் அனுமதி மறுப்பு, ஏ.டி.எம்., போன்ற வங்கி இயந்திரங்களுக்குத் தடை போன்றவையும் சென்டோசாவில் அமல்படுத்தப்பட்டுள்ளன. குடித்துவிட்டு ரகளை செய்வது போன்ற பிரச்னைகள் அறவே களைவதற்காகத்தான் இதுபோன்ற தடைகள் என்கின்றனர்.
இந்த கிளப்பால், உள்நாட்டு உற்பத்தியில் அரை சதவீதத்திலிருந்து ஒரு சதவீதம் வரை உயர வாய்ப்பிருப்பதாக அந்நாட்டு சுற்றுலா மேம்பாட்டு ஏஜன்சி தெரிவித்துள்ளது.
Leave a Reply