புதுடில்லி : பாகிஸ்தானில் சீக்கியர்கள் இரண்டு பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மிகவும் அநாகரிகமான செயல் என இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா கண்டனம் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் வடமேற்கு பிராந்தியத்தில் சீக்கிய இளைஞர்கள் 3 பேரை தாலிபன் பயங்கரவாதிகள் கடத்திச் சென்று தலையை துண்டித்து படுகொலை செய்தனர். பின்னர் இருவரது உடல்களும் அங்குள்ள குருத்துவாரா கோயிலுக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவத்திற்கு சீக்கிய அமைப்புகள் மற்றும் பஞ்சாபில் பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்திய வெளியுறவு துறை அமைச்சர் எஸ்.எம்., கிருஷ்ணா பார்லி.,க்கு வெளியே நிருபர்களிடம் கூறுகையில் ; இந்த பிரச்சனைக்கு இந்தியா முக்கியத்துவம் அளித்து உரிய நடவடிக்கை எடுக்கும். சிறுபான்மை மக்களின் பாதுகாப்புக்கு பாகிஸ்தான் உத்திரவாதம் அளிக்க வேண்டும். மேலும் வரும் பிப்., 25ம் தேதியன்று பாகிஸ்தானுடன் நடைபெறும் பேச்சுவார்த்தையின் போது சீக்கியர்கள் படுகொலை குறித்து பேசப்படும் இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த சம்பவத்துக்கு பா.ஜ., தெரிவித்துள்ளது கண்டனத்தில் இந்திய அரசு சீக்கியர்கள் கடத்தப்பட்ட தகவல் கிடைத்ததுமே அவர்களை மீட்க எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காதது இந்த கோர சம்பவத்துக்கு ஒரு காரணம் என பா.ஜ., செய்தி தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பஞ்சாப் அரசு தரப்பிலும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சீக்கியர்களின் வாழ்வுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும். இது ஒரு முக்கிய பிரச்னையாக பஞ்சாப் அரசு கருதுகிறது. என அம்மாநில துணை முதல்வர் கூறியுள்ளார்.
Leave a Reply