புதுடில்லி: சீனாவின் ஆயுத தயாரிப்பு நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனித்து வருகிறோம், என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் அந்தோணி தெரிவித்துள்ளார்.
டில்லியில் நடந்த ஆசிய பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொண்டு ராணுவத்துறை அமைச்சர் அந்தோணி பேசியதாவது:சீனாவின் ஆயுத தயாரிப்புகள் குறித்து தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறோம். அதற்கேற்ப நாமும் தயார் நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருக்கிறோம். அதே நேரத்தில் சீனாவுடனான பேச்சுவார்த்தையும் முன்னேற்றத்தில் தான் இருக்கிறது.
இருநாட்டுக்கும் இடையே நம்பிக்கை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் நடந்து கொண்டிருக்கின்றன.நாம் தயாரித்துள்ள 3,500 கிலோ மீட்டர் தூரம் சென்று தாக்கவல்ல, அக்னி-3 ரக ஏவுகணை எந்த நாட்டுக்கு எதிராகவும் தயாரிக்கப்பட்டதல்ல.ஒவ்வொரு நாடும் தனது எல்லைக்குட்பட்ட பகுதிகளை பாதுகாக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவது வாடிக்கை. அந்த நோக்கத்தில் தான் நாமும் நமது எல்லை பகுதியை பாதுகாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறோம்.
நமது பாதுகாப்பு கொள்கை எந்த நாட்டையும் தாக்கும் நோக்கம் கொண்டதல்ல. நாம் நம்மை பாதுகாத்துக் கொள்ளும் நோக்கோடு தான் செயல்பட்டு வருகிறோம். அணுகுண்டை சுமந்து செல்லவல்ல அக்னி-3 ஏவுகணை, பாகிஸ்தான் மற்றும் சீனாவின் பீஜிங் நகரம் வரை சென்று தாக்கும் வல்லமை படைத்தது.அணு ஆயுதங்கள் உலகம் முழுவதும் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும், என்ற கொள்கையை நாம் எப்போதும் ஆதரிக்கிறோம்.
அதே நேரத்தில், முதலில் நாம் அணு ஆயுதத்தை பயன்படுத்தமாட்டோம், என்ற கொள்கையிலும் உறுதியாக இருக்கிறோம்.அணு ஆயுதங்களை குறைக்க வழி செய்யும் பேச்சுவார்த்தையையும் நாம் வரவேற்கிறோம்.பாகிஸ்தானில் செயல்பட்டுவரும் பயங்கரவாதிகளின் நடவடிக்கைகளையும் நாம் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத அமைப்புகளால் நம்நாட்டுக்கு மட்டுமல்லாது, உலகத்துக்கே ஆபத்து விளையும். இந்த அமைப்புகளை ஆதரிப்பவர்களை வேரறுக்க வேண்டும்.
அப்போது தான் அந்த நாட்டு மக்களும் நிம்மதியடைவர்.எந்தவொரு நாடும் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு தரக்கூடாது. அப்போது தான் இந்த பகுதியில் அமைதி நிலவும்.இவ்வாறு அந்தோணி பேசினார்.
Leave a Reply