சென்னை : சேலம் மாவட்டத்தில் மேக்னசைட் தாதுப்பொருளுக்கான விலையை, 25 ஆண்டுகளுக்கு வசூலிப்பதற்கு சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. பொது ஏலத்தில் 1,564 டன் மேக்னசைட் தாதுவை விற்கவும் ஐகோர்ட் அனுமதித்துள்ளது.
சேலம் மாவட்டம் கொண்டப்பநாயக்கன்பட்டி, அழகுபுரம், அய்யம்பெருமாள்பட்டி கிராமங்களில் சட்டவிரோதமாக மேக்னசைட் தாதுப்பொருள் தோண்டி எடுக்கப்படுவதாக அரசுக்கு தகவல்கள் வந்தன. இதையடுத்து, 98ம் ஆண்டு ஜூலை முதல் 2000ம் ஆண்டு ஏப்ரல் வரையில் தோண்டி எடுக்கப்பட்ட தாதுப்பொருளின் விலையாக ஒரு கோடியே 85 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் என கமலா உள்ளிட்ட ஆறு பேருக்கு சேலம் மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். மேலும், இருப்பில் உள்ள 1,564 டன் மேக்னசைட் தாதுப்பொருளை பொது ஏலத்தில் விற்கவும் கலெக்டர் அனுமதியளித்தார். இதை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில் கமலா உள்ளிட்ட ஆறு பேரும் மனுக்கள் தாக்கல் செய்தனர்.
மனுக்களை நீதிபதிகள் பானுமதி, எம்.எம்.சுந்தரேஷ் அடங்கிய “டிவிஷன் பெஞ்ச்’ விசாரித்தது. தாதுப்பொருளை எடுப்பதற்கு குத்தகை விடப்பட்டது விதிமுறைகளின்படி தானா, இது செல்லுமா என்பது குறித்தும் பரிசீலிக்கப்பட்டது. மனுக்களை விசாரித்த “டிவிஷன் பெஞ்ச்’ பிறப்பித்த உத்தரவு: சேலம் மாவட்டம் கொண்டப்பநாயக்கன்பட்டி, அழகுபுரம், அய்யம்பெருமாள்பட்டி கிராமங்களில் 78 ஏக்கரில் சட்டவிரோதமாக மேக்னசைட் தோண்டி எடுக்கப்பட்டிருப்பதால், அவற்றுக்கான விலையை வசூலிக்க சட்டப்படி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 84ம் ஆண்டு ஆகஸ்ட் முதல் தோண்டி எடுக்கப்பட்ட தாதுப்பொருளின் விலையை வசூலிக்க புதிதாக நோட்டீசை அரசு அனுப்ப வேண்டும். இருப்பில் உள்ள 1,564 டன் மேக்னசைட் தாதுவை பொது ஏலத்தில் விற்பதைப் பொறுத்தவரை, அதை ரத்து செய்வதற்கு எந்த முகாந்திரமும் இல்லை.
மனுதாரர்கள் உடனடியாக தாதுப்பொருள் எடுப்பதை நிறுத்த வேண்டும். குத்தகைக்கு விடப்பட்ட இடத்தை அரசிடம் ஒப்படைக்க வேண்டும். கடந்த 84ம் ஆண்டு ஆகஸ்ட் முதல் இதுவரைக்கும் மேக்னசைட் தாதுவின் விலையை சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து வசூலிப்பதற்காக, அவர்களிடம் விளக்கம் கேட்டு எட்டு வாரங்களுக்குள் நோட்டீஸ் அனுப்ப வேண்டும். இந்த நோட்டீசில் 98 முதல் 2000ம் ஆண்டு வரையிலான நாட்களும் அடங்கும். நோட்டீஸ் அனுப்பிய பின், மனுதாரர்களுக்கு போதிய சந்தர்ப்பம் வழங்கி சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். 1,564 டன் மேக்னசைட் தாதுவை பொது ஏலத்தில் விற்பனை செய்வதைப் பொறுத்தவரை கலெக்டர் பிறப்பித்த உத்தரவு உறுதி செய்யப்படுகிறது. இவ்வாறு “டிவிஷன் பெஞ்ச்’ உத்தரவிட்டுள்ளது.
Leave a Reply