புதுடில்லி:”கிருஷ்ணா கோதாவரி படுகையில் கிடைக்கும் இயற்கை எரிவாயுவில், தமிழகத்திற்கு உரிய பங்கை பெற்றுத் தந்திட மத்திய அரசு உதவி செய்ய வேண்டும்’ என, பிரதமர் மன்மோகன் சிங்கிடம், துணை முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.
உள்நாட்டு பாதுகாப்பு குறித்து, டில்லியில் அனைத்து மாநில முதல்வர்களின் மாநாடு நேற்று நடைபெற்றது. மாநாட்டில் பங்கேற்ற பின் பிரதமர் மன்மோகன் சிங்கை, துணை முதல்வர் ஸ்டாலின் தனியாக சந்தித்தார்.
அப்போது பிரதமரிடம் கேட்டுக் கொண்டதாவது:கிருஷ்ணா கோதாவரி படுகையில் இயற்கை எரிவாயு கிடைத்து, அதை ரிலையன்ஸ் நிறுவனம் எடுத்து வருகிறது. அந்த இயற்கை வாயுவை, சென்னையிலிருந்து தூத்துக்குடி வரை பைப்லைன் மூலம் கொண்டு செல்ல இரண்டு ஆண்டுகளுக்கு முன் பெட்ரோலியம் அமைச் சகம் அனுமதி வழங்கி விட்டது.
ஆனாலும், இதுவரை தமிழகத்தில் ஒரு அங்குல எரிவாயு பைப்கூட போடவில்லை. எரிவாயு அனைத்தும் குஜராத்துக்கும், மகாராஷ்டிராவிற்கும் கொண்டு செல்லப்பட்டு விட்டது.ஏற்கனவே அளித்த வாக்குறுதியின்படி, தமிழகத்திற்கு உண்டான நியாயமான எரிவாயு பங்கை பெற்றுத் தந்திட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.
தவிர, திருப்பூர் சாயப்பட்டறை கழிவுநீர் சுத்திகரிப்பு திட்டத்திற்கு மாநில அரசு ஏற்கனவே நிதியை ஒதிக்கி விட்ட நிலையில், மத்திய அரசு தன்னுடைய பங்கான 240 கோடி ரூபாயை உடனடியாக ஒதுக்கிட வேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தினார். இதன்பின், தன் இரண்டு நாள் டில்லி பயணத்தை முடித்துக் கொண்டு ஸ்டாலின், நேற்று மாலை சென்னை திரும்பினார்.
Leave a Reply