கொழும்பு, பிப். 15: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் போரில் மாண்ட போதிலும், தனித் தமிழீழத்தை வலியுறுத்துபவர்களின் கனவு இன்னும் கலையவில்லை என, இலங்கை ராணுவத்தின் தலைமைத் தளபதி ஜகத் ஜயசூரியா கூறினார்.
இலங்கையின் கிழக்குப் பகுதியில் உள்ள கல்லாடி, தொப்பிகலா, வாகரை, புன்னானி ராணுவ முகாம்களுக்கு கடந்த வாரம் சென்ற ஜயசூரியா ராணுவ வீரர்கள் மத்தியில் பேசுகையில் இதைத் தெரிவித்தார். அவர் மேலும் பேசியதாவது:
விடுதலைப் புலிகளுடன் தொடர்பு வைத்திருந்தவர்களும், வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களும் இன்னமும் தமிழீழம் குறித்து விவாதித்து வருவதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.
கடந்த ஆண்டு, மே மாதம் நடைபெற்ற இறுதிக் கட்டப் போரில் விடுதலைப் புலிகள் வீழ்த்தப்பட்ட போதிலும், தமிழீழம் குறித்த அவர்களது கனவு கலையவில்லை.
இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் தற்போது கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடுவதற்காகவே ராணுவ வீரர்கள் பெருமளவில் நிறுத்தப்பட்டுள்ளனர்; போரிடுவதற்காக அல்ல. நமது நாட்டைப் பாதுகாக்கும் பொறுப்பு ராணுவத்துக்கு உள்ளது.
விடுதலைப் புலிகளுடனான போரில் தங்களது உயிர்களைத் தியாகம் செய்த இலங்கை ராணுவ வீரர்களின் பணி மகத்தானது. இந்தப் போரில் பல வீரர்கள் கை, கால்களையும் இழந்துள்ளனர். அவர்களது தீரச் செயல்களைப் பாராட்டுகிறேன்.
இந்த நிலையில், ஏதாவது ஒரு குழுவினர் மீண்டும் ஆயுதம் ஏந்திப் போராடத் துணிந்தால், அதையும் எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும்.
வருகிற இலங்கை நாடாளுமன்றத் தேர்தலின் போது, சட்டம்- ஒழுங்கை நிலைநாட்ட போலீஸôருக்கு ராணுவத்தினர் உதவ வேண்டும்.
வடக்கு, கிழக்குப் பகுதிகளில் பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்களுக்காக, நிலவேலி, யாலா ஆகிய இடங்களில் விடுமுறைக்கால தங்குமிடங்களை ஏற்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
ராணுவ வீரர்களுக்கான ஊதியமும், இதர சலுகைகளும் அண்மையில் உயர்த்தப்பட்டுள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளில் ராணுவத்தில் புதிதாகச் சேர்ந்த வீரர்களுக்கு, இந்த ஆண்டு சிறப்புப் பயிற்சி அளிப்பதில் கவனம் செலுத்தப்படும் என்றார் ஜயசூரியா.
Leave a Reply