சென்னை:தரமான கல்வி, சமூக நீதியை உறுதி செய்வதற்காக தான் சமச்சீர் கல்விக்கான சட்டம் கொண்டு வரப்பட்டது’ என, சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு பதிலளித்துள்ளது.
தமிழக அரசு கொண்டு வந்த சமச்சீர் கல்வியை எதிர்த்து சென்னைஐகோர்ட்டில் தனியார் பள்ளிகள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.சமச்சீர் கல்வியை அமல் படுத்துவதற்கு தடை விதிக்க, சென்னை ஐகோர்ட் மறுத்து விட்டது.
இவ்வழக்கில், 24ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய அரசுக்கு ஐகோர்ட் உத்தர விட்டிருந்தது. அதன்படி, பள்ளி கல்வித் துறையின் இணைச் செயலர் யோகானந்தம் தாக்கல் செய்த பதில் மனு:தமிழகத்தில் பின்பற்றப்படும் வெவ்வேறு கல்வி முறை யை ஆராய, முன்னாள் துணைவேந்தர் முத்துகுமரன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு கலந்தாய்வு கூட்டங்களை நடத்தியது.
வெவ்வேறு கல்வி முறையினால் மாணவர்கள் மத்தியில் வேற்றுமை நிலவுவதாக உணரப்பட்டது.இதையடுத்து, சமச்சீர் கல்வியை அமல்படுத்துவது குறித்து இந்தக் குழு, கலந் தாய்வு கூட்டங்களை நடத்தியது. பொதுமக்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்களிடம் இக்குழு விவாதித்தது.பின், அரசுக்கு அறிக்கை அளித்தது. அறிக்கையை பரிசீலித்த அரசு, சர்வ சிக்ஷ அபியனின் மாநில திட்ட இயக்குனர் விஜயகுமார் தலைமையில் ஒரு நபர் குழுவை அமைத்தது.
முத்துகுமரன் தலைமையிலான குழு அளித்த பரிந்துரைகளை ஆராயவும், சமச்சீர் கல்வியை எளிதான முறையில் அமல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயவும் அதிகாரி விஜயகுமார் நியமிக்கப்பட்டார். அவரும் அறிக்கையைஅரசுக்கு சமர்ப்பித்தார். மாணவர்களுக்கு தரமான கல்வி அளிக்கப்பட வேண்டும் என்பது தான் அரசின் நோக்கம். கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற் சிக்கான தேசிய கவுன்சில் வகுத்த தேசிய பாடத் திட்டத் தின் அடிப்படையில், ஒன்று முதல் 10ம் வகுப்பு வரை பாடத் திட்டத்தை தயாரிக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.
பாடப் புத்தகங்கள் அனைத்தும் தமிழ்நாடு பாட நூல் கழகத்தின் மூலம் அச்சிடப்படும். மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் நிர்வாகத்தில் உரிமையில், சமச்சீர் கல்வி சட்டம் குறுக்கிடவில்லை. மாணவர்கள் மத்தியில் சமூகநீதி, தரமான கல்வியை உறுதி செய்வதற்காக மாநில அரசு எடுத்த கொள்கை முடிவின் விளைவு தான் இச்சட்டம். மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு ஒன்று முதல் 10ம் வகுப்பு வரை, பாடத் திட்டங்களை மாநில அரசு தான் நிர்ணயிக்கிறது.வரைவு பாடத்திட்டங்கள் வெப்சைட்டில் வெளியிடப் பட்டு கருத்துக்கள் கோரப்பட்டுள்ளன.
பாடத்திட்டங்களை வடிவமைப்பதற்கு முன், வட்டார அளவில் ஆசிரியர்களின் கருத்துக்கள் பெறப்பட் டன.பொது பாடத்திட்ட வரைவின் முக்கிய நோக்கம், தரமான கல்வி அளிப்பது தான். பாடத் திட்டத்தை இறுதி செய்யும் முன், அனைத்து தரப்பிலும் பெறப்பட்ட கருத்துக்கள் கருத்தில் கொள்ளப்படும்.பள்ளிகள் வரும் ஜூன் மாதம் திறக்கப்படும். பாடப் புத்தகங்களை எழுதும் ஆரம்பப் பணிகள் துவங்கப்பட்டுள்ளன.
மே மாதம் இரண்டாவது வாரத்தில் முதல் மற்றும் ஆறாவது வகுப்புகளுக்கான பாடப் புத்தகங்கள் அச்சிடப்பட்டு அனைத்து பள்ளிகளுக்கும் வழங்கப்படும்.இவ்வாறு பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.
இம்மனு நீதிபதி வெங்கட்ராமன் முன் விசாரணைக்கு வந்தது. அரசு சார்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் வில்சன், சிறப்பு அரசு பிளீடர் சங்கரன் ஆஜராகினர். பள்ளிகள் சார்பில் சீனியர் வக்கீல்கள் முத்துகுமாரசாமி, சிலம்பண்ணன் ஆஜராகினர். இறுதி விசாரணையை மார்ச் 3ம் தேதிக்கு நீதிபதி வெங்கட்ராமன் தள்ளி வைத்தார்.
Leave a Reply