தலாய் லாமாவை ஒபாமா சந்திக்கக் கூடாது; அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை

posted in: உலகம் | 0

03dalaiபெய்ஜிங்,​​ பிப்.​ 2:​ திபெத்திய ஆன்மிக தலைவர் தலாய் லாமாவை அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா சந்திக்கக் கூடாது.​ அவ்வாறு சந்தித்தால் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே உள்ள உறவு கடுமையாகப் பாதிக்கும் என்று சீன வெளியுறவுத் துறை துணை அமைச்சர் ஜு வெய்கூன் எச்சரித்தார்.

திபெத்தை சீனா ஆக்கிரமித்தபோது அங்கு இருந்து தப்பி இந்தியாவில் அடைக்கலம் புகுந்தார் திபெத் நாட்டு ஆன்மிக தலைவர் தலாய் லாமா.​ அவர் இமாசலப்பிரதேச மாநிலம் தர்மசாலாவிலிருந்து செயல்பட்டு வருகிறார்.

திபெத்துக்கு சுயாட்சி கோரி தலாய் லாமா,​​ ஆதரவாளர்கள் போராடி வருகின்றனர்.​ இது தொடர்பாக சீன கம்யூனிஸ்ட் அரசுடன் அவ்வப்போது பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.​ கடந்த வாரம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் இல்லை.​ தலாய் லாமா தரப்பில் சுயாட்சி கோரிக்கை மீண்டும் வலியுறுத்தப்பட்டது.​ ஆனால் அதை சீனா நிராகரித்துவிட்டது.​ இருப்பினும் இரு தரப்பிலும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில் தலாய் லாமா வரும் 16-ம் தேதி முதல் 10 நாள்கள் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.​ அமெரிக்காவில் தங்கியிருக்கும்போது திபெத்திய ஆன்மிகத் தலைவர் தலாய் லாமாவை அதிபர் ஒபாமா சந்திப்பார் என்று வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

ஆன்மிகத் தலைவர் தலாய் லாமாவைச் சந்திக்க ஒபாமா விருப்பமாக உள்ளார் என்று அமெரிக்கா சீனாவிடம் தெளிவுபடுத்திவிட்டது என்றும் அவர் கூறினார்.

ஆனால் இதற்கு சீனா கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.​ தலாய் லாமாவை ஒபாமா சந்தித்தால் இரு நாட்டுக்கும் இடையே மலர்ந்து வரும் நட்புறவில் கடும் விரிசல் ஏற்படும் என்று எச்சரித்துள்ளது.​ அமெரிக்க நிறுவனங்களுக்கு சீனாவில் தடை விதிக்கப்படும் என்றும் மிரட்டி உள்ளது.

தலாய் லாமாவின் அமெரிக்க பயணத்தைத் தொடர்ந்து சீன அதிபர் ஹு ஜிண்டாவோ அமெரிக்கா செல்கிறார்.​ எனவே தலாய் லாமாவை ஒபாமா சந்திப்பதை சீனா விரும்பவில்லை.

ஏற்கெனவே தைவானுக்கு அமெரிக்கா ஆயுதம் விற்பனை செய்வதால் இரு நாடுகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ள நிலையில் தலாய் லாமா பிரச்னை எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல் ஆகிவிடும் என்று கருதப்படுகிறது.

தலாய் லாமா அமெரிக்க உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு பயணம் செய்வது தனது சுயாட்சி கோரிக்கைக்கு ஆதரவு தேடித்தான் என்று சீனா சந்தேகப்படுகிறது.

தலாய் லாமாவுடன் திபெத்தின் முக்கியத் தலைவர்கள் சிலர் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார் இந்தப் பயணத்தின் போது அவர்கள் அதிபர் ஒபாமாவை சந்தித்து திபெத்தின் சுயாட்சி விவகாரம் குறித்து விவாதிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திபெத் பிரச்னைக்குத் தீர்வு காண்பது குறித்து சீன கம்யூனிஸ்ட் தலைவர்களும்,​​ தலாய் லாமாவின் பிரதிநிதிகளும் 2002-ல் இருந்து தொடர்ந்து ரகசியப் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.​ எனினும்,​​ இந்த விவகாரத்தில் இதுவரை எவ்விதத் தீர்வும் எட்டப்படவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *