நீதிபதி கிருஷ்ணா தலைமையில் ஆராய 5 பேர் குழு : தெலுங்கானா விவகாரத்தில் அரசு அறிவிப்பு!

posted in: அரசியல் | 0

புதுடில்லி : தெலுங்கானா தனி மாநில கோரிக்கை குறித்து ஆய்வு செய்யவும், ஆந்திராவில் உள்ள அனைத்துப் பிரிவு மக்கள் மற்றும் அரசியல் கட்சிகளிடம் ஆலோசனை நடத்தவும், ஓய்வு பெற்ற நீதிபதி பி.என்.கிருஷ்ணா தலைமையில் ஐந்து பேர் அடங்கிய குழுவை மத்திய அரசு நியமித்துள்ளது. இதன் மூலம், தெலுங்கானா போராட்டத்திற்கு தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தெலுங்கானா தனி மாநிலம் அமைப்பதற்கு ஆதரவாகவும், எதிராகவும், ஆந்திரா முழுவதும் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக போராட்டம் நடந்து வருகிறது. இதையடுத்து, “தெலுங்கானா தனி மாநிலம் அமைப்பதற்கான நடவடிக்கை விரைவில் துவங்கப்படும்’ என, மத்திய அரசு உறுதி அளித்தது.தெலுங்கானா விவகாரத்துக்கு தீர்வு காண்பது குறித்து, கமிட்டி அமைக்கப்படும் என்றும் கூறியது. இருந்தாலும், தெலுங்கானா தனி மாநில கோரிக்கைக்கு ஆதரவாக போராட்டங்கள் தொடர்ந்தன. நேற்று கூட, தெலுங்கானா பகுதியில் 500 கி.மீ., தூரத்திற்கு மனிதச் சங்கிலி போராட்டம் நடந்தது. இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில், நேற்று அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:தெலுங்கானா தனி மாநில கோரிக்கை குறித்து ஆய்வு செய்யவும், ஆந்திராவில் உள்ள அனைத்து தரப்பு மக்கள் மற்றும் அரசியல் கட்சிகளிடம் இந்தப் பிரச்னைகள் குறித்து கலந்து ஆலோசிக்கவும், சுப்ரீம் கோர்ட்டில் பணியாற்றி ஓய்வு பெற்ற நீதிபதி பி.என்.கிருஷ்ணா தலைமையில் ஐந்து பேர் அடங்கிய கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 2009 டிசம்பர் 9 மற்றும் 23ம் தேதிகளில் மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம், தெலுங்கானா விவகாரம் தொடர்பாக அறிக்கைகளை வெளியிட்டார். ஜனவரி 5ம் தேதி, ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த அங்கீகரிக்கப்பட்ட எட்டு அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தினார். இவற்றின் அடிப்படையில், தற்போது நீதிபதி கிருஷ்ணா தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.

யார் யார்? கமிட்டியில் நீதிபதி கிருஷ்ணா தவிர, டில்லியில் உள்ள தேசிய சட்டப் பல்கலையின் துணைவேந்தர் பேராசிரியர் ரன்பீர் சிங், சர்வதேச உணவு கொள்கை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் மூத்த ஆராய்ச்சியாளர் அபுசலேக் ஷெரீப், டில்லி ஐ.ஐ.டி., சமூக அறிவியல் துறையின் பேராசிரியர் ரவீந்தர் கவுர், மத்திய அரசின் முன்னாள் உள்துறை செயலர் வினோத் கே.துகால் ஆகியோர் உறுப்பினர்களாக இடம் பெற்றுள்ளனர். இவர்களில் துகால் உறுப்பினர் செயலராக இருப்பார்.கமிட்டியின் விதிமுறைகள் மற்றும் அது என்னென்ன பணிகளைச் செய்ய வேண்டும் என்பது, அதன் தலைவருடன் கலந்து ஆலோசித்த பின், விரைவில் முடிவு செய்யப்படும்.இவ்வாறு உள்துறை அமைச்சக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், ஐந்து உறுப்பினர்கள் அடங்கிய தெலுங்கு தேசம் கட்சிக் குழுவினர் நேற்று மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரத்தை சந்தித்துப் பேசினர். அப்போது, “தனி தெலுங்கானா மாநிலம் உருவாக்கக் கூடாது’ என, எதிர்ப்புத் தெரிவித்தனர். முன்னாள் மத்திய அமைச்சர் எர்ரன் நாயுடு தலைமையிலான இந்தக் குழுவினர், “தெலுங்கானா விவகாரத்தில் மத்திய அரசு அவசரப்பட்டு முடிவு எடுக்கக் கூடாது. நிபுணர் குழு அமைக்கும் முன், அனைத்து தரப்பினரையும் கலந்து ஆலோசிக்க வேண்டும்’ என, கேட்டுக் கொண்டனர்.

இந்நிலையில், தனி மாநில கோரிக்கைக்கு ஆதரவாகப் போராடி வரும், தெலுங்கானா கூட்டு செயல் குழுவின் அமைப்பாளர் கோதண்ட ராம் கூறுகையில், “தெலுங்கானா கோரிக்கை குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசு கமிட்டியை நியமித்துள்ளது. இதை வரவேற்கிறோம். கமிட்டியின் ஆய்வு எல்லை குறித்த வரையறைகள் வெளியிடட்டும் என்று காத்திருக்கிறோம். அதன்பின் எங்களின் முழு கருத்தை தெரிவிப்போம்’ என்றார்.இதே கருத்தையே தெலுங்கானாவுக்கு ஆதரவாக போராடி வரும் அரசியல் கட்சிகளும், தலைவர்களும் கூறியுள்ளனர்.

இதற்கிடையில், ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சி விவகாரங்களை கவனித்து வரும் மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி கூறியுள்ளதாவது:ஆந்திர மாநிலம் அழகான, வளர்ந்து வரும் மாநிலம். மாநிலத்தின் சிறப்பான நலன் கருதி மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்ல வேண்டும். தேர்வுகளை எழுத வேண்டும். போராட்டத்தை தவிர்த்து அரசுக்கு அவர்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்.ஆந்திராவில் சட்டத்தின் ஆட்சி நடக்க அனுமதிக்க வேண்டும். அரசாட்சியோ அல்லது வளர்ச்சியோ பாதிக்கக் கூடாது.இவ்வாறு மொய்லி கூறினார்.

காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நாளை நடைபெற உள்ளது. அந்தக் கூட்டத்திலும் தெலுங்கானா கோரிக்கை குறித்தும், நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்தும் விவாதிக்கப்படும் என, அந்தக் கட்சியின் பொதுச் செயலர் ஜனார்த்தன் திவேதி கூறியுள்ளார்.தவிரவும், பொதுவாக இம்மாதிரி மாநிலம் உருவாக்குவதற்கு நீதிபதி தலைமையிலான கமிட்டி இறுதி முடிவு காண என்ன பலன் தரப்போகிறது என்று பா.ஜ., சந்தேகம் எழுப்பியிருக்கிறது.

“அரசியல் சட்டப்படி குழு செல்லாது’ : ஐதராபாத் : “தெலுங்கானா தனி மாநில கோரிக்கை பற்றி ஆய்வு செய்ய அமைக்கப்பட்டுள்ள ஐந்து பேர் குழு, அரசியல் சட்டப்படி செல்லத்தக்கது அல்ல’ என, தெலுங்குதேசம் மற்றும் பிரஜா ராஜ்யம் கட்சிகள் தெரிவித்துள்ளன.இதுதொடர்பாக பிரஜா ராஜ்யம் கட்சியின் அரசியல் விவகார கமிட்டி உறுப்பினர் கோடகிரி வித்தியாதர ராவ் கூறுகையில், “நாட்டின் தென்பகுதியில் உள்ள பெரிய மாநிலமான ஆந்திரத்தை உடைக்க மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரமும், சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லியும் சதி செய்கின்றனர். இந்த கமிட்டி, அரசியல் சட்டப்படி செல்லத்தக்கது அல்ல. மத்திய அமைச்சரவை இதற்கு ஒப்புதலும் அளிக்கவில்லை. மாநிலத்தை பிரிப்பதற்காக ஒரு கமிட்டி அமைக்கும் போது, அதற்கு எப்படி அமைச்சரவையின் ஒப்புதல் பெறாமல் இருக்க முடியும்’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *