பட்ஜெட்டில் தமிழகம் நிறைய எதிர்பார்க்கிறது : அமைச்சர் மம்தாவிடம் டி.ஆர்.பாலு கோரிக்கை

posted in: அரசியல் | 0

tblarasiyalnews_64607965947“தமிழக ரயில்வே திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். குறிப்பாக திண்டுக்கல் – விழுப்புரம் அகல ரயில் பாதை திட்டத்தை உடனடியாக துவக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அகலப்பாதை மாற்றம், மின்மயமாக்கல் மற்றும் அறிவிக்கப்பட்ட புதிய ரயில் பாதை திட்டங்களை நிறைவேற்றும் வகையில் தமிழகத்துக்கு நிதி ஒதுக்கீடு இருக்க வேண்டும்’ என, தி.மு.க., வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து தி.மு.க., சார்பில் அக்கட்சியின் பார்லிமென்ட் கட்சித் தலைவர் டி.ஆர்.பாலு, டில்லியில் ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜியை சந்தித்து, தமிழக ரயில்வே திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்திடும்படி கோரிக்கை மனு அளித்தார்.
அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் எரிசக்திக்கான இயற்கை வளங்கள் என்று பார்த்தால், பொதுவாக பெரிய அளவில் இல்லாத நிலை காணப்படுகிறது. நீர், கனிமம் உள்ளிட்ட இயற்கை வளங்கள் குறைவான தமிழகத்தில், தொழில் வளர்ச்சிக்கு என்று பெரிதும் நம்பியிருப்பது, போக்குவரத்து வசதி உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளைத் தான்.
நாற்பது ஆண்டுகளாக, மத்தியில் நிலையான ஆட்சி அமைவதற்கு பெரிதும் உதவியாகவும், துணையாகவும் இருந்து வரும் மாநிலம் தமிழகம். ஆனால், ரயில்வே திட்டங்களில் இம்மாநிலத்திற்கு போதுமான பங்கீடு அளிக்கப்படாமலேயே இருந்து வருகிறது. உதாரணத்திற்கு, சென்னை பறக்கும் ரயில் திட்டம்; இந்த திட்டத் திற்கு மாநில அரசு 66 சதவீத நிதி உதவி வழங்கியும், முழுமை பெறாமல் இருந்து வருகிறது.
சில ஆண்டுகளுக்கு முன் வரை, நாட்டிலேயே அதிகமாக மீட்டர் கேஜ் பாதை உள்ள மாநிலம் தமிழகமாக இருந்தது.
திண்டுக்கல் – கோவை பாதையை அகலப்பாதையாக்கும் திட்டம், நான்கு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. வெறும் 30 கி.மீ., தூரம் மட்டுமே போடப்பட்டுள்ளது. கோவைக்கும், மதுரைக்கும் இணைப்பு ஏற்படுத்தும் இந்த பாதை திட்டம், ஆமை வேகத்தில் நடைபெறுவதற்கு நிதி ஒதுக்கீடு இல்லாததே காரணம்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அறிவிக்கப்பட்ட விழுப்புரம் – திண்டுக்கல் இரட்டை அகலப்பாதை திட்டப் பணி இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை. மாநிலத்தின் உயிர்நாடியாகத் திகழும் இந்த பாதை அமைக்கப்பட்டால், அது, தென்மாவட்டங்களுக்கு பேருதவியாக இருக்கும். சரக்குகளை ஏற்றிச் செல்வதற்கு என்றே, தனியாக ரயில் பாதை திட்டம் வகுக்கப்பட்டது.
முந்தைய ஆட்சியில் இந்த திட்டம் அறிவிக்கப்பட்ட போது, மும்பை – டில்லி மற்றும் லூதியானா – கோல்கட்டா மார்க்கத்தை அடுத்து, சென்னை – மும்பை மற்றும் சென்னை – கோல்கட்டா பாதை அறிவிக்கப்படும் என்று லாலு பிரசாத் வாக்குறுதி அளித்தார். ஜப்பான் வங்கி உதவியோடு, வட இந்தியாவில் பணிகள் ஆரம்பமாகி நடைபெற்று வரும் நிலையில், சென்னைக்கு அறிவிக்கப்பட்டிருந்த சரக்கு ரயில் பாதை திட்டம் என்னவாயிற்று என்றே தெரியவில்லை. இந்த திட்டத்தை வரும் பட்ஜெட்டில் தமிழகம் எதிர்பார்க்கிறது.
சென்னை – மகாபலிபுரம் – புதுச்சேரி, ஈரோடு – பழனி, ஜோலார்பேட்டை – திருப்பத்தூர் – பர்கூர் – கிருஷ்ணகிரி – ஓசூர் ஆகிய மூன்று ரயில் திட்டங்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தன. இதற்கான ஆரம்ப கட்ட சர்வே பணிகள் அனைத்தும் முடிந்துவிட்டன. ஆயினும், இந்த ரயில் திட்டங்கள் தாமதமாகி வருகின்றன. இது தவிர, புதிய ஐந்து ரயில் திட்டங்கள் தமிழகத்துக்கு என்று அறிவிக்கப்பட்டு, இந்த திட்டங்களில் 50 சதவீதத்தை மாநில அரசு ஏற்க வேண்டுமென்றும் கூறப்பட்டிருந்தது.
அரியலூர் – தஞ்சாவூர், நீடாமங்கலம் – மன்னார்குடி – பட்டுக்கோட்டை, திண்டுக்கல் – குமுளி, தர்மபுரி – மொரப்பூர், திருவண்ணாமலை – ஜோலார்பேட்டை ஆகிய ஐந்து திட்டங்களுக்கும் ரயில்வே போர்டு அனுமதியளித்து, திட்டக் கமிஷனுக்கு வந்த போது, தமிழக அரசும் திட்டச் செலவில் பங்கேற்ற வேண்டுமென கேட்கப்பட்டது. இந்த திட்டங்களையும் எதிர்வரும் பட்ஜெட்டில் அறிவித்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மதுரை – தூத்துக்குடி, மதுரை – கன்னியாகுமரி பாதைகள் மின்சார மயமாக்கப்படும் என்று ஏற்கனவே அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால், இந்த அறிவிப்பு என்னவானது என்றே தெரியவில்லை. வேலைகள் ஆரம்பமாகவில்லை. தமிழகத்தில் சென்னையை தவிர, பிற நகரங்களில் மின்சார ரயில்கள் இயக்கப்படவில்லை. கோவை – ஈரோடு,கோவை – பொள்ளாச்சி, மதுரை – திண்டுக்கல், மதுரை – விருதுநகர், திருச்சி – தஞ்சை, நெல்லை – தூத்துக்குடி என, நகரங்களை இணைக்கும் வகையில், மின்சார ரயில் திட்டம் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழக ரயில்வே திட்டங்கள் எல்லாமே போதிய நிதி ஒதுக்கீடு இல்லாத காரணத்தினால் தான் தாமதம் பெற்று வருகிறது. இதை இந்த பட்ஜெட்டில் போக்கி, தமிழக ரயில்வே திட்டங்கள் அனைத்தும் விரைந்து நிறைவேற்றிட என்னென்ன செய்ய வேண்டு மொ அனைத்தும் செய்யப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *