புதுடில்லி : “மத்திய அரசு தாக்கல் செய்யவுள்ள பொது பட்ஜெட்டில், பெண்களுக்கான வருமான வரி விலக்கு உச்சவரம்பை அதிகரிக்க வேண்டும்’ என, பெண்கள் நல அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.
தற்போதுள்ள விதிமுறைப்படி, ஆண்டுக்கு 1.95 லட்சம் ரூபாய் வரை வருமானம் பெறும் பெண்கள், வருமான வரி செலுத்த வேண்டியது இல்லை. இந்நிலையில், மத்திய அரசு தாக்கல் செய்யவுள்ள இந்தாண்டுக்கான பொது பட்ஜெட்டில், பெண்களுக்கான வருமான வரி விலக்கு உச்சவரம்பு மேலும் அதிகரிக்கப்பட வேண்டும் என, பெண்கள் அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன. மத்திய சமூக ஆராய்ச்சித் துறை இயக்குனர் ரஞ்சனா குமாரி கூறியதாவது: பெண்களின் வருமானத்தை, ஆண்களின் வருமானத்துடன் ஒப்பிடக் கூடாது. பெண்கள் முற்றிலும் மாறுபட்ட வாழ்க்கை சூழ்நிலையில் பணியாற்றுகின்றனர். பெண்களை, பொருளாதார ரீதியாக வலிமையாக்கும் நடைமுறைகள் அவசியம்.
பெண்கள் பெறும் வருமானம், மனித மூலதனமாக கருதப்படுகிறது. குறிப்பாக, பெண்களின் வருமானத்தில் பெரும் பகுதி, அவர்களின் குழந்தைகளின் கல்விக்காக செலவிடப்படுவதை, இதற்கு உதாரணமாக கூறலாம். இதன்மூலம், அந்த குடும்பத்தின் வாழ்க்கை தரம் உயர்கிறது. ஒரு பெண் பெறும் வருமானம் முழுவதும், அந்த குடும்பத்துக்காக செலவழிக்கப் படக் கூடியதாக உள்ளது. கணிசமான வருமானம் ஈட்டும் பெண்கள் கூட, பொருளாதார ரீதியாக பாதுகாப்பற்ற நிலையிலேயே உள்ளனர். எனவே, மத்திய அரசு தாக்கல் செய்யவுள்ள பொது பட்ஜெட்டில் பெண்களுக்கான வருமான வரி விலக்கு உச்சவரம்பில் சலுகை அறிவிக்கப்பட வேண்டும். இவ்வாறு ரஞ்சனா குமாரி கூறினார்.
கல்வி ஆராய்ச்சித் துறை இயக்குனர் விமலா ராமச்சந்திரன் கூறியதாவது: பெண்களுக்கான வருமான வரி விலக்கு உச்சவரம்பை அதிகரிப்பது, அவர்களை ஊக்கப்படுத்துவதாக இருக்கும். இதன்மூலம், மேலும் அதிகமான பெண்கள் பணிபுரிவதில் ஆர்வம் காட்டுவர். குறிப்பாக, பெண்களின் பெயரில், சொத்துக்கள் பதிவு செய்யப்படும் போது, அதற்கான முத்திரைக் கட்டண வரி குறைக்கப்பட வேண்டும். இதன் மூலம், பெண்களின் பெயரில் அதிகமான சொத்துக்கள் பதிவு செய்ய வாய்ப்பு உள்ளது. இது, பெண்களை சமுதாயத்தில் சுயமாக நிற்பதற்கு உதவி செய்யும். இவ்வாறு விமலா கூறினார். மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் கிருஷ்ணா திராத் கூறுகையில், “வரி விதிப்பில் பெண்களுக்கு சலுகை காட்ட வேண்டும் என, பல்வேறு பெண்கள் நல அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன. இதுகுறித்து அரசு ஆலோசித்து வருகிறது’ என்றார்.
Leave a Reply