டெல்லி: மத்திய அமைச்சர் பிரனாப் முகர்ஜி இன்று தாக்கல் செய்த 2010-11ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை இந்திய தொழில் துறையினர் வரவேற்றுள்ளனர்.
குறைந்தப்பட்ச மாற்று வரி(எம்ஏடி) 15 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர்த்தப்பட்டிருப்பதை தவிர்த்து, பட்ஜெட் [^]டின் மற்ற அம்சங்கள் பாராட்டும் படி அமைந்துள்ளதாக தொழிலதிபர்கள் கருத்து கூறியுள்ளனர்.
‘வருவாய் பற்றாக்குறை விகிதத்தை 6.9 என்ற அளவிலேயே கட்டுப்படுத்தி இருப்பதும், அனைத்து தரப்பினரையும் திருப்தி படுத்தும் சமநிலை பட்ஜெட்டை அளித்ததற்காக பிரனாப் முகர்ஜியை பாராட்டலாம்.
ஆனால், குறைந்தபட்ச மாற்று வரிகளின் மூலம் சற்று அதிருப்தி ஏற்படுத்தியுள்ளார் பிரனாப் என்று இந்திய தொழில் வர்த்தக கழகங்களின் கூட்டமைப்பு தலைவர் ஹர்ஷ்பதி சிங்கானியா கூறினார்.
சிஐஐ தலைவர் வேணு சீனிவாசன் கூறுகையில், ‘இந்த பட்ஜெட் மிகவும் கச்சிதமான, பொறுப்பான திட்டமிடலுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வளர்ச்சி உறுதி.
வருமான வரி வரம்புகள் பற்றிய அறிவிப்புகள் மிகவும் வரவேற்கத்தக்கது. அதே போல மறைமுகமான சில ஊக்குவிப்பு சலுகைகள் குறிப்பிட்ட காலத்தில் திரும்பப் பெற்றுக்கொண்டதும் சரியான நடவடிக்கை.
ஆனால் ஒரேயொரு குறையாக தெரிவது எம்ஏடி (குறைந்தபட்ச மாற்று வரி) தான்’ என்றார்.
பார்தி என்டர்பிரைசஸ் துணை தலைவர் ராஜன் மிட்டல் கூறுகையில், ‘எம்ஏடி வரிகள் உயர்த்தப்படாமல் இருந்தால் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்திருப்போம்.
கூடுதல் வரியை குறைந்திருந்தாலும், எம்ஏடியை வரியை உயர்த்தியிருப்பது அதிருப்தியாக உள்ளது. எனினும் இந்த பட்ஜெட் வளர்ச்சி சார்ந்து தயாரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்துவதற்கான தயார் நிலையை இந்த பட்ஜெட் மூலம் உருவாக்கியுள்ளனர்’ என்றார்.
‘எம்ஏடி வரி உயர்த்தப்பட்டதால் சிறு மற்றும் நடுத்தர ஐடி நிறுவனங்கள் பாதிக்கப்பட்டாலும், பெரிய நிறுவனங்களுக்கு பாதிப்பு இருக்காது. என்றாலும், ஐடி துறையில் மோசமான அனுபவங்கள் சமீபத்தில் கிடைத்துள்ள நிலையில் இந்த வரி உயர்வு மேலும் அதிருப்தியை ஏற்படுத்துகிறது’ என்று இன்போசிஸ் தலைமை நிர்வாக அதிகாரி கிரிஸ் கோபாலகிருஷ்ணன் குறிப்பிட்டார்.
Leave a Reply