பன்னாட்டு நிறுவனங்களின் சதி மரபணு கத்தரி : ம.பி., அரசு குற்றச்சாட்டு

posted in: அரசியல் | 0

tblarasiyalnews_80999392272திருவனந்தபுரம் : “”மரபணு கத்தரிக்காயை அறிமுகப்படுத்தும் முயற்சிக்கு, பன்னாட்டு நிறுவனங்களின் சதிதான் காரணம். மரபணுப் பயிர்களை ம.பி.,யில் அனுமதிக்க மாட்டோம்.

அதற்காக தனி மசோதா நிறைவேற்றப்படும். தேவைப்பட்டால் தடையும் விதிப்போம்’ என்று மத்தியபிரதேச மாநில அரசு தெரிவித்துள்ளது.
மரபணுப் பயிர்கள் குறித்த இரண்டு நாள் கூட்டத்தில் கலந்து கொண்ட ம.பி., வேளாண் அமைச்சர் ராமகிருஷ்ண குஸ்மரியா இதுகுறித்து பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: வேளாண்மை என்பது மாநிலங்களின் விவகாரம். இதில் மத்திய அரசு தனது கொள்கையை எங்களிடம் திணிக்க முடியாது. இப்பிரச்னையில் தனிப்பட்ட முறையில் ஆய்வு நடக்கவில்லை. எடுக்கப்பட்ட ஆய்வுகள் அனைத்தும் மரபணு பயிர் கொள்கைக்கு ஆதரவாக ஒருதலைப் பட்சமாகத்தான் இருக்கிறது.
மரபணு கத்தரி மூலம் பன்னாட்டு நிறுவனங்கள் இந்நாட்டில் நுழைந்தால், பின், அவைதான் வேளாண்மையில் யதேச்சதிகாரம் செலுத்த வாய்ப்பாகி விடும். மரபணு மாற்றப்பட்ட பயிர்கள், பாரம்பரியமான இங்குள்ள விதை வகைகளை அழித்துவிடும். அதோடு சுற்றுச்சூழலில் எதிர்மாறான விளைவையும், மனிதன், மிருகங்கள் ஆகியோரிடத்தில் உடல்நலக் கோளாறுகளையும் உண்டாக்கி விடும்.
ம.பி.,யில் மரபணு மாற்றப்பட்ட பருத்திப் பயிரிடப்பட்ட சில ஆண்டுகளில் அவை பயிரிடப்பட்ட இடங்களுக்கருகில் வாழ்ந்தவர்கள் பல நோய்களால் பாதிக்கப்பட்டனர். சுற்றுச்சூழலும் பாதிக்கப்பட்டது. கத்தரிக்காய்க்கு இந்தியாதான் தாயகம். இங்கு 2,500 வகையான கத்தரிக்காய்கள் பயிரிடப்படுகின்றன. பன்னாட்டு நிறுவனங்கள் வந்து விட்டால், விதைகளுக்காக அவர்கள் அந்நிறுவனங்களைத்தான் சார்ந்திருக்க வேண்டிய நிலை உருவாகும்.
மரபணு மாற்றப் பயிர்களுக்கு எதிரான ஒரு பொதுக்களத்தை ம.பி., அரசு முன்னெடுத்து உருவாக்கும். பா.ஜ., மரபணு மாற்றப் பயிர்களை எதிர்க்கிறது. இதில் எவ்வித அரசியலும் இல்லை. இதில் நமது பாரம்பரிய விவசாயத்தின் எதிர்காலம்தான் கேள்விக் குறியாகி இருக்கிறது. இவ்வாறு ராமகிருஷ்ண குஸ்மரியா தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *