சென்னை:”தனியார் பள்ளிகளில் வசூலிக்கப்படும் கட்டணத்தை ஒழுங்குபடுத்தவும், லாப நோக்கில் கல்வி வியாபாரமாகக் கூடாது என்பதை உறுதி செய்யவும் தான் சட்டம் கொண்டு வரப்பட்டது’ என, சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு பதிலளித் துள்ளது.
தனியார் பள்ளிகளில் மாணவர்களிடம் இருந்து அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக அரசுக்கு புகார்கள் வந்தன. ஒரே ஆண்டில் 5,000 ரூபாய்க்கு மேல் கல்விக் கட்டணம் உயர்த்தப்பட்ட தனியார் பள்ளிகளும் உண்டு. இதனால், பெற்றோர் மிகவும் பாதிக்கப்பட்டனர்.அரசுக்கு தொடர்ந்து புகார்கள் வரவே, தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணத்தை ஒழுங்குபடுத்துவதற்காக கடந்த ஆண்டு ஒரு சட்டத்தை கொண்டு வந்தது.
இந்தச் சட்டத்தின் படி, கல்வி கட்டணத்தை தீர்மானிப்பதற்காக, ஓய்வு பெற்ற நீதிபதி கோவிந்தராஜன் தலைமையில் குழுவையும் அமைத்தது.இச்சட்டத்தை எதிர்த்தும், குழுவின் செயல்பாடுகளுக்கு தடை விதிக்கக் கோரியும் சென்னை ஐகோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப் பட்டன.மனுக்களை தலைமை நீதிபதி கோகலே, நீதிபதி சசிதரன் அடங்கிய “முதல் பெஞ்ச்’ விசாரிக்கிறது. குழுவின் செயல்பாடுகளுக்கு தடை விதிக்க “முதல் பெஞ்ச்’ மறுத்து விட்டது.தனியார் பள்ளிகள் சார்பில் சீனியர் வக்கீல்கள் முத்துகுமாரசாமி, கே.துரைசாமி உள்ளிட்ட வக்கீல்களும், அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் வில்சன், சிறப்பு அரசு பிளீடர் சங்கரனும் ஆஜராகினர். தற்போது இறுதி விசாரணை நடந்து வருகிறது. நாளை மறுதினம் மீண்டும் விசாரணை துவங்குகிறது. ஒரு சில நாட்களில் விசாரணை முடிந்து, தீர்ப்பு தள்ளிவைக்கப்படும்.
ஐகோர்ட்டில் பள்ளி கல்வித் துறையின் இணைச் செயலர் ராஜேந்திரன் தாக்கல் செய்த பதில் மனு:முறையற்ற கல்வி கட்டணம் வசூலிப்பதை தடுக்க வேண்டும் என்றால், சட்டம் கொண்டு வர வேண்டும் என அரசு பரிசீலித்து, இச்சட்டத்தை கொண்டு வந்தது. இச்சட்டப்படி அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழு, நான்கு முறை கூடியுள்ளது. பள்ளிகளிடம் இருந்து போதிய விவரங்களை தாக்கல் செய்யுமாறு கூறப்பட்டுள்ளது.பள்ளிகளுக்கு கல்விக் கட்டணத்தை தீர்மானிப்பதற்கு முன், அனைத்து பிரச்னைகளையும் குழு பரிசீலிக்கும்.மாணவர்கள், சம்பந் தப்பட்டவர்கள் தரப்பை குழு கேட்கும். வெவ்வேறு தலைப்புகளில் கட்டணங்களை வசூலிப்பதற்கு இந்தச் சட்டம் முற்றுப் புள்ளி வைக்கும்.இவ்வாறு பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.
அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் வில்சன் தாக்கல் செய்த எழுத்துப்பூர்வமான வாதம்:முன்னாள் துணைவேந்தர் சிட்டிபாபு தலைமையிலான குழு அரசுக்கு அளித்த அறிக்கையில், பள்ளி அமைந்துள்ள இடம், மாணவர்கள் எண் ணிக்கை, அடிப்படை வசதிகளைப் பொறுத்து கட்டணம் நிர்ணயிக்க வேண்டும் என்றும் எல்.கே.ஜி., முதல் மேல்நிலைப் பள்ளி வரை கட்டணங்களை நிர்ணயிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.கல்வி தொடர்பாக சட்டம் இயற்ற மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது. இஸ்லாமிக் பவுண்டேஷன், இனாம்தார், டி.எம்.ஏ., பாய் வழக்குகளில், சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவின்படி, கல்வி தொடர்பாக சட்டம் இயற்ற மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது.
மாணவர்கள், பெற்றோர்களின் நலனை கருத்தில் கொண்டு இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது.அபரிமிதமான கட்டணம் வசூலிப்பதையும், லாப நோக்கு மற்றும் நன்கொடை கட்டணத்தையும் தடுக்கும் நோக்கில் இச்சட்டம் கொண்டு வரப் பட்டது.கல்விக் கட்டணத்தை குழு ஆராய்ந்து தீர்மானிக்கும். அரசியலமைப் புச் சட்டத்தை இது மீறுவதாக கூற முடியாது. சிறுபான்மையினரின் உரிமைகள் எதுவும் மீறப்படவில்லை.கட்டண நிர்ணய வழிமுறையை ஆரம்ப கட்டத்திலேயே கட்டுப்படுத்த வேண்டும். தமிழக அரசு கொண்டு வந்துள்ள சட்டம், நடைமுறைப் படுத்தக் கூடியது தான். இச்சட்டம் அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகளுக்கு மட்டுமல்லாமல், அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் பொருந்தும்.
அரசு உதவி பெறாத பள்ளிகளுக்கு மாநில அரசு கட்டணம் நிர்ணயிக்கவில்லை. கட்டணத்தை ஒழுங்குமுறைப்படுத்துகிறோம்.வர்த்தகமயமாக, லாப நோக்கில் கல்வி இருக்கக் கூடாது என்பதை உறுதி செய்வதற்கும், மாணவர்களின் நலனுக்காகவும் சட்டம் கொண்டு வரப் பட்டது. பள்ளிகள் தரப் பில் ஆட்சேபனைகளை தெரிவிக்கவும் சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது.சட்டப்படி தேவையான அம்சங்களை, ஏற்கனவே 85 சதவீத பள்ளிகள் நிறைவேற்றியுள்ளன. நீதிபதி கோவிந்தராஜன் கமிட்டி, நடவடிக்கைகளை துவங்கி விட்டது. பள்ளிகள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Leave a Reply