புதுதில்லி, பிப். 15: பள்ளிகளில் தொலைதூர கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்குரிய கொள்கைகளை வடிவமைக்க அரசு பரிசீலித்து வருகிறது என்று மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல் தெரிவித்தார்.
திறந்த நிலை பள்ளிகளுக்கான தேசிய அமைப்பின் ஆண்டு மாநாடு தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் பேசும்போது அமைச்சர் இந்தத் தகவலைக் கூறினார்.
தற்போது 14 முதல் 18 வயதுக்குள்பட்ட 1 கோடி குழந்தைகள் பள்ளிக் கல்வி பயின்று வருகின்றனர். இதில் 16 லட்சம் பேர் திறந்த நிலை பள்ளி திட்டத்தின் மூலம் கல்வி பயின்று வருகின்றனர் என்று அவர் கூறினார்.
16 லட்சம் என்ற எண்ணிக்கை போதுமானதாக இல்லை. இது 11-வது திட்ட காலத்தில் 70 லட்சம் முதல் 80 லட்சம் வரை அதிகரிக்கப்பட வேண்டும். 2020-ல் இது 1.5 கோடியாக அதிகரிக்க வேண்டும் என்றார் அவர்.
தொலைதூரக் கல்வியில் உள்ள முக்கிய இடர்பாடு என்னவெனில் அதன் மீது உள்ள அவநம்பிக்கைதான். முறையான பள்ளிகளுக்கு இணையாக தொலைதூர பள்ளிக் கல்வி தரமாக இருக்குமா, சிறப்பாக கற்பிக்கப்படுமா என்ற சந்தேகம் நிலவுகிறது. எனவே தொலைதூரக் கல்வியின் தரத்தை மேம்படுத்த அனைவரும் ஏற்கத்தக்கதாக மாற்ற வேண்டும். தொலை தூரக் கல்வியில் உள்ள குறைகளைக் கண்டறிந்து அவற்றைக் களைய முறையான பள்ளிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தொலைதூர பள்ளிக் கல்வி, தேசிய திறந்த நிலை பள்ளிக் கல்வி மையம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் தற்போது 14 மாநிலங்களில் திறந்த நிலை பள்ளிக் கல்வித் திட்டம் அமல்படுத்தப்படுகிறது. ஆனால் பல மாநிலங்கள் இந்தத் திட்டத்தை முறையாக அமல்படுத்தவில்லை. இத் திட்டத்தை அமல்படுத்த உத்தரப் பிரதேசம் மற்றும் கர்நாடக மாநிலங்கள் முடிவு செய்திருந்தாலும் அதற்குரிய செயல்திட்டங்கள் உருவாக்கப்படவில்லை என்று அவர் குறை கூறினார்.
முறையான பள்ளிக் கல்விக்கு மாற்றாக இருக்கும் வகையில் தொலை தூர பள்ளிக் கல்வியின் தரம் மேம்படுத்தப்பட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
திறந்த நிலை பள்ளிக் கல்வி திட்டத்தை செயல்படுத்தும் மாநிலங்களுக்கு நிதி அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது என்று மனித ஆற்றல் மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர் டி. புரந்தேஸ்வரி கூறினார்.
திறந்த நிலை பள்ளிக் கல்வி மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்க தேவையான வழிமுறைகள் குறித்து கூட்டத்தில் ஆராயப்பட்டது.
Leave a Reply