தூத்துக்குடி: “”பன்னாட்டு தொலை தொடர்பு நிறுவனங்கள் கொள்ளை அடிப்பதற்காக பி.எஸ்.என்.எல்.ஐ., முடக்க சதி நடக்கிறது.
அதற்கு, உயரதிகாரிகள் திரைமறைவில் உடந்தைய�க உள்ளனர்” என அதன் ஊழியர் சங்க அகில இந்திய துணை பொதுச்செயலர் பி.அபிமன்யு குற்றம் சாட்டினார். தூத்துக்குடியில், பி.எஸ்.என்.எல்., ஊழியர் சங்க 5வது தமிழ் மாநில மாநாடு இன்று துவங்கி மார்ச்2ம் தேதி வரை நான்கு நாட்கள் நடக்கிறது.
அந்த ஏற்பாடுகளை கவனிக்க வந்த, அச் சங்கத்தின் அகில இந்திய துணை பொதுச்செயலர் பி.அபிமன்யு கூறியதாவது: இம்மாநாட்டில் பி.எஸ்.என்.எல்., நிறுவனத்திற்கு உரிய கருவிகள் வாங்கி, அதை தனியாரோடு போட்டிபோட வைப்பதற்கான வழிவகைகள் குறித்து மத்திய அரசிற்கு வலியுறுத்துவது, பி.எஸ்.என்.எல்.,லின் பத்து சதவீத பங்குகளை மத்திய அரசு தனியாருக்கு விற்பனை செய்வதை எதிர்ப்பது, எங்களது ஊழியர்கள், பொதுமக்களோடு கனிவாக பழகுவது உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விவாதித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளன. கடந்த சில நிதியாண்டுகளாக பி.எஸ்.என்.எல்., வருமானம் குறைந்து கொண்டே வருகிறது.
அதற்கு மத்திய அரசின் தவறான கொள்கை, நிர்வாகத்தில் தலையீடே காரணம். நெட்வெர்க்கை விரிவாக்கம் செய்ய ஆக்கப்பூர்வமான முயற்சி மேற்கொள்ளப்படவில்லை. கடந்த மூன்று ஆண்டாக புதிய கருவிகள் எதுவும் வாங்கப்படவில்லை. மாறாக கருவிகள் வாங்க விடப்பட்டிருந்த டெண்டரும் ரத்து செய்யப்பட்டுவிட்டது. அதனால், தனியார் நிறுவனங்களோடு போட்டிபோட முடியாத நிலையில்பி.எஸ்.என்.எல்., உள்ளது.
மொத்தத்தில், பன்னாட்டு தொலை தொடர்பு நிறுவனங்கள் கொள்ளை அடிப்பதற்காக பி.எஸ்.என்.எல்.ஐ., முடக்க சதி நடக்கிறது. அதற்கு, உயரதிகாரிகள் திரைமறைவில் உடந்தையாக உள்ளனர். பி.எஸ்.என்.எல்.,ஐ வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்ல மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், ஊழியர்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவோம், என்றார். சங்கத்தின் தமிழ் மாநில செயலர் எஸ்.செல்லப்பா, நிர்வாகிகள் உடனிருந்தனர். மாநாட்டையொட்டி இன்று பேரணி நடக்கிறது.
Leave a Reply