பிரச்னைகளை எழுப்பி அமளி ஏற்படுத்த கட்சிகள் திட்டம்

posted in: அரசியல் | 0

tblarasiyalnews_32827395201புதுடில்லி:பார்லிமென்டின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று துவங்குகிறது. விலைவாசி உயர்வு உட்பட பல்வேறு பிரச்னைகளை எழுப்பி, அரசுக்கு நெருக்கடி கொடுக்க எதிர்க்கட்சிகளும், ஆளும் கூட்டணியில் உள்ள சில கட்சிகளும் முடிவு செய்துள்ளதால், அனல் பறக்கும் விவாதங்கள் நடக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.பார்லிமென்டின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று துவங்குகிறது.

முதல்நாளான இன்று இரு சபைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் உரை நிகழ்த்துகிறார். சபையை சுமுகமாக நடத்திச் செல்வது குறித்து விவாதிக்க, அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை கடந்த சனிக்கிழமை, சபாநாயகர் மீராகுமார் கூட்டியிருந்த போது, அதில் பங்கேற்ற தலைவர்கள் பலர், “விலைவாசி உயர்வு முக்கியமான பிரச்னை. அதுபற்றி பார்லிமென்டில் அவசியம் விவாதிக்க வேண்டும். அதுவும் முதல் வேலை நாளான செவ்வாய்கிழமையே விவாதிக்க வேண்டும்’ என, தெரிவித்தனர். இல்லையெனில், சபையை சுமுகமாக நடத்த முடியாது என்றும் கூறினர்.

நெருக்கடி: அதனால், இன்று ஜனாதிபதி உரை முடிந்தவுடன், நாளை விலைவாசிப் பிரச்னை குறித்த விவாதம், சபையில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. “எந்தப் பிரச்னை குறித்தும் பார்லிமென்டில் விவாதிக்க தயார்’ என, பிரதமர் மன்மோகன்சிங் ஏற்கனவே அறிவித்துள்ளதால், அரசும் விலைவாசி உயர்வு தொடர்பாக விவாதம் நடத்த அனுமதிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், உர மான்யம் தொடர்பாக புதிய திட்டத்தை கடைப்பிடிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.யூரியா விலை உயர்வும் அமலாக்கம் பெறுகிறது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, முலாயம்சிங் தலைமையிலான சமாஜ்வாடி கட்சியினர் வெட்டுத் தீர்மானம் ஒன்றை கொண்டுவர திட்டமிட்டுள்ளனர். இந்த வெட்டுத் தீர்மானத்திற்கு ஆளும் கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளான தி.மு.க., திரிணமுல் காங்கிரஸ் போன்றவற்றின் ஆதரவைப் பெறவும் திட்டமிடப்பட்டுள்ளது.

அப்படி ஆதரவு அளித்தால், அது மத்திய அரசுக்கு பெரும் நெருக்கடியை உருவாக்கும். இந்தப் பிரச்னைகள் தவிர, இந்திய- பாகிஸ்தான் வெளியுறவு செயலர்கள் வரும் 25ம் தேதி நடைபெற உள்ள பேச்சுவார்த்தை, பயங்கரவாதம், உள்நாட்டு பாதுகாப்பு, சிறுபான்மையினருக்கான இடஒதுக்கீடு தொடர்பாக, ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் சமர்ப்பித்த அறிக்கை, மத்திய மாநில உறவுகள் தொடர்பாக நீதிபதி சாகீர் அகமது சமர்ப்பித்த அறிக்கை, ஜம்மு- காஷ்மீர் மாநிலத்திற்கு அதிக தன்னாட்சி அதிகாரம் வழங்க முற்படுவது போன்றவை குறித்தும் எதிர்க்கட்சிகள் விவாதிக்க முற்படலாம்.

அரசுக்கு நெருக்கடி கொடுக்க பிரச்னைகளுக்கு குறைவில்லை என்றாலும், சபையில் கட்சிகள் மத்தியில் எந்த அளவுக்கு ஒத்துழைப்பு உள்ளது என்பதைப் பொறுத்தே, சபை சுமுகமாக நடக்குமா அல்லது அமளி துமளியாகுமா என்பது தெரியவரும்.இன்று துவங்கும் பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத் தொடரில், வரும் 24ம் தேதி 2010-11ம் ஆண்டிற்கான ரயில்வே பட்ஜெட்டும், 26ம் தேதி பொதுபட்ஜெட்டும் சபையில் தாக்கல் செய்யப்படுகிறது.

பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகள் தொடர்பான மானியக் கோரிக்கைகள் பற்றி நிலைக்குழுக்கள் முடிவு எடுப்பதற்காக, மார்ச் 16ம் தேதி ஒத்திவைக்கப்படும் லோக்சபா, ஏப்ரல் 12ம் தேதி மீண்டும் துவங்குகிறது. பார்லிமென்டின் பட்ஜெட் கூட்டத் தொடர்மே 7ம் தேதி முடிவுக்கு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *